உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் வசித்தவர் பிரதாப் யாதவ் (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா யாதவ் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் இருவரும் அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தார் அறைக் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, இருவரும் இறந்துகிடந்திருக்கின்றனர். உடனே இது தொடர்பாக காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, இருவரின் உடல்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி இறந்ததை உறுதி செய்துவிட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பல்ராம்பூர் எஸ்.பி பிரசாந்த் வர்மா, “பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, இருவரும் ஒரே நேரத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றனர். ஆனால், தம்பதிக்கு இதயப் பிரச்னைகள் எதுவும் இல்லை.
மோசமான காற்றோட்ட அறையில் தூங்கியபோது, அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தம்பதியின் மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய, லக்னோவிலுள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்தில் இரு உடல்களின் உள்ளுறுப்புகளும் மேலதிக விசாரணைகளுக்காக சோதிக்கப்படுகின்றன.
அவர்களின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. பிரதாப்-புஷ்பா தம்பதியின் உடல்கள் கிராம மக்களின் முன்னிலையில், ஒரே தீயில் தகனம் செய்யப்பட்டன” எனத் தெரிவித்திருக்கிறார்.
திருமணத்தின் மறுநாளே திருமண வீடு துக்க வீடாக மாறியதால், அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.