புவனேஸ்வரம்: எங்கள் வாழ்நாளில் இத்தனை உடல்களை பார்த்ததே இல்லை என ஒடிஸா தீயணைப்பு துறை அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில் சிக்கியது.
இதில் நிறைய பெட்டிகள் சேதமடைந்தன. அவற்றில் 17 பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளான இந்த விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து தகவலறிந்த மீட்பு துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஒடிஸா தீயணைப்பு துறையை சேர்ந்த உயரதிகாரியான பொது சேவையின் பொது இயக்குநர் சுதன்ஷு சாரங்கி இதுகுறித்து பேசுகையில், விபத்து நடந்த இடத்திற்கு ஒரு கிரேன் வந்து பெட்டிகளை இழுக்க உதவியது.
நாங்கள் ரயில் பெட்டிகளை மெல்ல இழுத்தோம். அவற்றின் கீழ் பயணிகள் சிக்கியிருக்கக் கூடும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மனமுடைந்துவிட்டோம். எங்கள் வாழ்நாளில் இத்தனை உடல்களை நாங்கள் பார்த்ததே இல்லை. கடந்த 20 ஆண்டுகளளில் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது என்றார்.
இந்த விபத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டுள்ளார். மேலும் இந்த ரயிலில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 10 பேரின் நிலை என்ன என தெரியவில்லை. அவர்கள் எங்காவது சென்றுவிட்டனரா, இல்லை உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரா என்பது குறித்து தமிழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரயில் தண்டவாளத்தில் இத்தனை பெட்டிகள் கவிழ்ந்துவிட்டதால் நிறைய ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் பத்திரமாக மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 137 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 8 பேர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.