ரயில் விபத்து.. மத கலவரத்தை உருவாக்க முயன்ற கும்பல்.. கண்டுபிடித்த சுபையர்.. விளாசிய ஒடிசா போலீஸ்

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிலர் மத ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.

ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்கும் முன் அதை வைத்து ஒரு கும்பல் மத கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. அதன்படி The Random Indian என்ற ட்விட்டர் கணக்கில், இந்த ரயில் விபத்து வெள்ளிக்கிழமை நடந்து உள்ளது. அருகிலேயே பாருங்கள் மசூதி உள்ளது என்று போஸ்ட் செய்துள்ளார். எப்படியாவது இந்த விஷயத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்களை மேலும் தனிமைப்படுத்த முடியாதா, கலவரத்தை உருவாக்க முடியாதா என்று இவர்கள் முயன்று வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் தினம் மற்றும் அருகே மசூதி உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இது இஸ்லாமியர்களின் வேலை.. இது விபத்து கிடையாது என்பது போல அந்த நபர் மத கலவரத்தை உண்டாக்கும் விதமாக போஸ்ட் செய்து இருந்தார்.

இந்த நிலையில் பிரபல பேக்ட் செக் செய்யும் அல்ட் நியூஸ் நிறுவனத்தின் சுப்பையர் இதை பகிர்ந்து அருகில் இருந்தது மசூதி கிடையாது. அது ஜெயின் கோவில். வேண்டுமென்றே கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று அந்த புகைப்படத்தை வெட்டி இப்படி பரப்பி வருகின்றனர்.

அது ஒரு இஸ்கான் கோவில் என்று ஆதாரங்களுடன் நிரூபணம் செய்துள்ளார். இதேபோல் ரயில்வே சிக்னலை தவறாக கொடுத்தது ஷாரிப் என்ற இளைஞர் என்றும் கூட பொய்யான தகவல்களை சில வன்முறை விரும்பிகள் இணையத்தில் பொய்யாக பரப்பி வருகின்றனர்.

சுப்பையர் இது தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒடிசா போலீசார் செய்துள்ள போஸ்டில், பாலசோரில் நடந்த சோகமான ரயில் விபத்துக்கு சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் வகுப்புவாத வண்ணம் கொடுக்க முயன்று வருகின்றனர். இது மிகவும் தவறானது, துரதிருஷ்டவசமானது.

விபத்துக்கான காரணம் மற்றும் பிற அனைத்து விதமான விசாரணைகளும் ஒடிசாவின் ஜிஆர்பி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இது போன்ற தவறான கருத்துள்ள மற்றும் தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்தை குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஒடிசா போலீசார் தெரிவித்துள்ளனர்.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.