ரஷ்யா, கனடா, ஜப்பான், பிரான்ஸ் ஜெர்மனி தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், “இந்த துயரமான விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா விடுத்துள்ள செய்தியில், “ஒடிசா ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது மற்றும் ஏராளமானோர் காயம் அடைந்தது குறித்த செய்தியால் நான் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” கூறியுள்ளர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது ட்விட்டர் பதிவில், “குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இத்துயரமான நேரத்தில் பிரான்ஸ் உங்கள் பக்கம் நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை எண்ணி வேதனைப் படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள செய்தியில், “ஒடிசா ரயில் விபத்து தொடர்பான படங்கள் மற்றும் செய்திகள் என் மனதை உடையச் செய்தன.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். இந்த கடினமாக நேரத்தில் இந்திய மக்களுக்கு கனடா மக்கள் துணை நிற்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ், தைவான் அதிபர் சாய்-இங் வென், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி, இத்தாலி துணை பிரதமர் அன்டோனியோ தஜானி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி உள்ளிட்டோரும் இரங்கலை தெரிவித்துள்னர்.

நேபாளம், பூடான், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா தனது ட்விட்டர் பதிவில், “ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இத்துயரமான நேரத்தில் பிரதமர் மோடி அரசுக்கும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.