பாலசோர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்கத்தா சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானது. மேதினிபூருக்கு சென்ற பேருந்து மதியம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. ரெயில் விபத்தில் இருந்து காயங்களுடன் தப்பியவர்கள், அடுத்து ஒரு விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.