சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் காதல் ஜோடியை தாக்கி தவறாக நடக்க முயன்ற ரவுடி கும்பலை தனி ஆளாக விரட்டி அடித்திருக்கிறார் பெண் காவலர் ஒருவர். மேலும், அவர்களை கைது செய்யவும் போலீஸாருக்கு உதவியுள்ளார்.
சமீபகாலமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதையில் தகராறு செய்வது, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, மறுப்பவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்குவது போன்ற சம்பவங்களை தற்போது அதிகம் காண முடிகிறது.
குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சம்பவங்கள் அதிரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கூட மெரினாவில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி ஒரு ரவுடி கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
போதையில் வந்த ரவுடிகள்:
இந்நிலையில், நேற்று மாலை மெரினா கடற்கரையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த ஒரு ரவுடி, அந்த காதல் ஜோடியிடம் தகராறு செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணிடமும் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர்.
காதல் ஜோடியை தாக்கினர்:
ஆனால் அவர்களை அங்கிருந்து செல்ல விடாத அந்த ரவுடி, தனது கூட்டாளிகள் இருவருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து அவர்களை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அங்கு ஏராளமானோர் இருந்த நிலையிலும், அவர்களை தட்டிக்கேட்ட யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், மெரினாவை ஒட்டிய காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலரான கலா தூரத்தில் இருந்து அங்கு ஏதோ பிரச்சினை நடப்பதை பார்த்துள்ளார்.
களமிறங்கிய பெண் காவலர் கலா:
இதையடுத்து, எதை பற்றியும் யோசிக்காமல் அங்கு சென்ற கலா, அந்த ரவுடி கும்பலிடம் அங்கிருந்து சென்றுவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், போதையில் இருந்த அந்த ரவடிகளோ, “உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படியே போய்விடு. இல்லையென்றால், நாங்கள் கத்தியை எடுக்க வேண்டியிருக்கும்” என மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு கொஞ்சமும் பயப்படாத காவலர் கலா, அவர்களை தாக்க தொடங்கினார்.
மிரண்டு ஓடிய ரவுடிகள்:
கலாவின் துணிச்சலை கண்டு மிரண்ட ரவுடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கலா அவர்களை துரத்தி சென்ற போதும் அவர்கள் பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்களின் பைக் எண்ணை குறித்து வைத்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.
ரவுடி கும்பல் கைது:
இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கலா கொடுத்த பைக் எண்ணை கொண்டு அந்த ரவுடி கும்பலை கைது செய்தனர். மேலும், துணிச்சலாக செயல்பட்ட காவலர் கலாவுக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களும் காவலர் கலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.