புதுடில்லி, குடும்ப நல நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், தன் மகனை இந்தியா அழைத்து வராத அமெரிக்க வாழ் இந்தியருக்கு, ஆறு மாத சிறையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானின் ஆஜ்மீரைச் சேர்ந்த தம்பதிக்கு, 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இதற்கிடையே, இந்த தம்பதி விவாகரத்து கேட்டு ஆஜ்மீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், 2022 மே மாதத்தில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர்.
அதன்படி, அந்த சிறுவன், 10ம் வகுப்பு வரை தாயுடன் இந்தியாவில் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1 – 30ம் தேதி வரை தந்தையுடன் அமெரிக்கா செல்லலாம்.
இதன்படி, கடந்தாண்டு ஜூன் மாதம் அழைத்துச் சென்ற மகனை, அந்த நபர் திருப்பி அழைத்து வரவில்லை.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தாண்டு ஜனவரியில் அளித்த உத்தரவில், சிறுவனை உடனே இந்தியா அழைத்து வர உத்தரவிட்டது.
ஆனால், அந்த நபர் அழைத்து வராததால், சிறுவனின் தாய் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த மே 16ல் புதிய உத்தரவை பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
அமெரிக்காவில், 2004 முதல் வசித்து வரும் இந்த நபர், நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறியுள்ளார். இதற்காக அவருக்கு ஆறு மாத தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால், மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இந்த நபரையும், சிறுவனையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், சி.பி.ஐ.,யும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்