சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய அங்கம் சூழல் அமைப்பு. இதில் உயிரினங்களின் சமநிலை அவசியம். ஒரு உயிரினம் முற்றிலும் அழிந்தால் அல்லது அழிந்து கொண்டிருந்தால் சூழல் அமைப்பினை கடுமையாக பாதிக்கும். உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு இடையே தொடர்பு காரணிகள்தான் சூழல் அமைப்பை நிர்ணயிக்கிறது.
மலேசியா சரவாக் மாநிலத்தில் கொசுக்களால் மலேரியா பரவியது. இதைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் டி.டி.டி.,மருந்து தெளித்தது. கொசுக்கள் அழிந்து, மலேரியா கட்டுக்குள் வந்தாலும் சூழல் அமைப்பில் பூதாகர பிரச்னை உருவெடுத்தது.டி.டி.டி.,மருந்தால் ஓணான், பல்லிகள் செத்துமடிந்தன. அவற்றை இரையாக்கிய பூனைகளும் இறந்தன. ஒரு கட்டத்தில் பூனைகளே இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டபோது, எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எலிகளால் பிளேக் நோய் பரவும் அபாயம். மக்கள் பீதியடைந்தனர்.
உலக சுகாதார நிறுவனம் ‘பறக்கும் பூனைகள்’ திட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்தது. அதன்படி இங்கிலாந்து ராயல் விமானப்படை விமானங்கள் மூலம் 14 ஆயிரம் பூனைகளை கொண்டுவந்து, சரவாக் பகுதியில் பாராசூட் மூலம் தரையிறக்கினர். எலிகள் கட்டுப்படுத்தப்பட்டு, சூழல் பாதுகாக்கப்பட்டது.அழிந்த ‘டோடோ’ பறவை மொரிசீயஸ் காடுகளில் ‘டோடோ’ பறவை முற்றிலும் அழிந்த கதை சோகமானது. அப்பறவை பறக்காமல், அச்சமின்றி மனிதர்களின் அருகில் வந்தது மற்றும் இறைச்சி ருசியாக இருந்ததால் அழியக் காரணங்களாகின.
டச்சுக்காரர்கள்தான் டோடோவை அதிகம் வேட்டியாடினர். டோடோ அழிந்த பின் அப்பகுதியின் சூழல் அமைப்பு பாதித்தது. விலைமதிப்புள்ள டோடோ மர விதைகள் ஒன்று கூட முளைக்கவில்லை. அதன் காரணத்தை பல ஆண்டுக்கு பின்தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.டோடோ மர பழங்களை அப்பறவைகள் உண்டு, அதன் ஜீரண முறையில் விதைகள் நொதித்து அப்பறவை எச்சங்கள் வழியாக வந்த விதைகள் மட்டுமே முளைத்தன. அதனால் அம்மரம் ‘டோடோ மரம்’ என்ற சிறப்பு பெயர் பெற்றது. டோடோ இனம் முற்றிலும் அழிந்ததால்தான் அம்மரத்தின் விதைகள் முளைக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பின் பல இன பறவைகளை டோடோ பழங்களை உண்ண வைத்து, அவைகளின் எச்சம் மூலம் வெளியேறிய விதைகளைக் கொண்டு முளைக்க வைக்க முயற்சித்தும் பயனில்லை.இறுதியாக டோடோ பறவை போல் ஜீரண முறை கொண்ட வான்கோழியை பயன்படுத்தி, சோதனை முயற்சி வெற்றி கண்டு விதைகளை முளைக்க வைத்து டோடோ மரக்கன்றுகள் உருவாகின. இதன் மூலம் சூழல் அமைப்பில் ஒவ்வொரு உயிரினத்தின் முக்கியத்துவத்தை உணரலாம். கழுகுகளை அழித்த ‘டைக்ளோபினாக்’ இறந்த விலங்குகள் மற்றும் அழுகியவைகளை காக்கை, கழுகுகள் உண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன.
கால்நடை நோய்களுக்கு தற்காலிக வலி நிவாரணியாக ‘டைக்ளோபினாக்’ மருந்தை டாக்டர்கள் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு தற்காலிகமாக நோய் குணமானாலும், மருந்தின் வீரியம் உடலில் தங்கியது. கால்நடைகள் இறந்து வயல்களில் வீசப்பட்டபோது, அவைகளை உண்ட கழுகுகள் செத்து மடிந்தன. உலகில் அதிவேகமாக அழிந்த இனம் கழுகுதான். அதற்கான காரணத்தை கண்டறிந்தபின் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ‘டைக்ளோபினாக்’ மருந்திற்கு தடை விதித்தன. தற்போது ஆசியக் கண்டத்தில் பல நாடுகள் கழுகுகளை பாதுகாக்க, இனப் பெருக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்தியாவில் மனிதன், ஏனைய உயிரினங்கள் வாழ அற்புதமான நகர் எனில் பெங்களூரு என்பர். ‘கார்டன் சிட்டி’ என சிறப்பு பெயர் கொண்ட அங்கு, காக்கைகளை காண்பது அரிதாக உள்ளது. இது அதிர்ச்சியான செய்தி. செவ்விந்திய பாடல் அழிந்துவரும் உயிரினங்களைக் கண்டறிந்து, பல நாடுகள் ‘ரெட் டேட்டா புக்’கில் பட்டியலிடுகின்றன. இற்கை வளங்களை அளவாக பயன்படுத்தி, மாசினை கட்டுப்படுத்தி சூழலை பாதுகாக்காவிடில் பல உயிரினங்கள் அழிவதோடு, மனிதனும் அழிந்துவிடுவான் என்ற அபாயநிலையை”இப்புவியில்,கடைசி மரம் வெட்டப்படும் போதும்கடைசி நீர்நிலை மாசுபடும் போதும்கடைசி மீன் பிடிபடும் போதும்மனிதன் நினைக்கிறான்வெறும் காகிதப் பணத்தை உண்டுவாழ முடியாதென்று!”-என செவ்விந்தியர்களின் நாடோடிப் பாடல் உணர்த்துகிறது.
உலகில் பல்லுயிர்களை காக்க மரங்களை நடுதல், காடுகளை உருவாக்குதல் இன்றியமையாதது. ‘அக்னிச் சிறகுகள்’ தந்த அப்துல் கலாம் ஒவ்வொரு மாணவரும் 5 மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார். உலகில் பல்லுயிர் பெருக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைதான் பல்லுயிரிகளுக்கு சிறப்பானது. காடுகள் அழிப்பால், பல்லுயிரிகளில் பல அழிந்து வருகின்றன. உலகம் அம்மணமாய்புவியில் ஒவ்வொரு 3 நிமிடத்திலும் கால்பந்து மைதானம் அளவிற்கு மரங்கள் வெட்டப்படுவதாகவும், கபடித் திடல் அளவிற்கே மரங்கள் நடப்படுவதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
3 கோடி மரங்கள் நட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய்,’உலகம் அம்மணமாய் இருக்கிறது, அதை பசுமை கொண்டு போர்த்த வேண்டும்,’ என்றார்.ஒவ்வொரு நாடும் வளம்பெற மூன்றில் ஒரு பங்கு காடுகள் மிக அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. உயிரின அழிவிற்கு காரணமான காற்று மாசினை கட்டுப்படுத்துவது மரங்கள். பரப்பளவில் சிறிய நாடுகள், மரங்களை நட இடமின்றி உள்ள ஐரோப்பிய நாடுகள்,’ரோபோ மரங்க’ளை சாலைகளில் வைத்து ‘கார்பன்-டை-ஆக்சைடை’கிரகிக்கச் செய்கின்றன.கார்பன் வர்த்தகம் புவி வெப்ப உயர்வு, பருவகால மாற்றம், ஓசோன் படலம் சிதைவு, அமில மழை, காடுகள் அழிப்பு, மின்னணு சாதன குப்பைகள் சுற்றுச்சூழல் பிரச்னைகளாக உலகை அச்சுறுத்துகின்றன.
1972 ல் சுவீடன் ஸ்டாக்ேஹாமில் பன்னாட்டுத் தலைவர்கள் விவாதித்தனர். அம்மாநாடு துவங்கிய முதல் நாளான ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பின் பல உச்சிமாநாடுகள் நடந்து கார்பன் வர்த்தகம் மற்றும் கார்பன் வரி அளவிற்கு, சுழலைக் காக்க நவீன நடவடிக்கைகள் பிரபலமாகியுள்ளது.நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாசினால் இயற்கை பாழ்படுவதை மற்றும் சக மனிதர்கள் துன்பப்படுவதை பற்றி மனிதர்கள் கவலைப்படுவதில்லை. பிள்ளைகளுக்காக பணம் சேர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, மனிதர்களில் பலர் வாழ்ந்து மறைகின்றனர்.
எதிர்கால சந்ததி சுத்தமான காற்று, குடிநீர் இன்றி அவதிப்படும்போதுதான் செவ்விந்தியர் நாடோடிப் பாடல் போல், வெறும் காகிதப் பணத்தை மட்டும் உண்டு வாழ முடியாது என்பதை உணர்ந்து நிகழ்கால சமுதாயம் சூழல் காப்பிற்கு சிறு பங்களிப்பேனும் செய்வது அவசியம்.உயிரினங்கள் அழிய மக்காத பிளாஸ்டிக் பைகள்தான் காரணம். இது அறிவியல் உண்மை. பிளாஸ்டிக் பயன்பாட்டால், நீர்நிலைகள் பாழ்பட்டுள்ளன. இதனை உணர்ந்து 2018 ல் உலக சுற்றுச்சூழல் தின முழக்கமாக, ‘நெகிழிப்(பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்ப்போம். மறுசுழற்சி இல்லையேல் மறுப்போம்,’ என அறிவிக்கப்பட்டது.
மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு 2019 ஜன.,1 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது வரவேற்கக்கூடியது. இதற்கு துணை நின்று சூழல், பல்லுயிரிகளை பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.
-முனைவர் ச.மரியரத்தினம்
பேராசிரியர்
ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி,திருப்புத்துார்.
ph:95850 53476
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்