Doctor Vikatan: என் மகளுக்கு வயது 17. அவளுக்கு ரத்தச்சோகை பிரச்னை உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவானது 9 அல்லது 10 என்ற அளவைத் தாண்டுவதே இல்லை. மருத்துவரிடம் காட்டி, இரும்புச்சத்துக்கான மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன். அவை அவளுக்கு கடுமையான மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா
இளம் பெண்களுக்கும் சரி, கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பமாக இல்லாதவர்கள் என யாருக்கு இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட் கொடுத்தாலும் சரி… அது ஏற்படுத்துகிற பக்கவிளைவுகளில் முக்கியமானது மலச்சிக்கல். ‘மலச்சிக்கலை ஏற்படுத்தாத மாதிரியான மாத்திரை எழுதிக் கொடுங்க’ என கேட்பவர்களைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட மாத்திரையில் இரும்புச்சத்தே இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. இரும்புச்சத்து மாத்திரைகளின் தன்மையே அப்படித்தான் இருக்கும்.
இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் வருகிறது என்பவர்களுக்கு அந்த மாத்திரைகளோடு சேர்த்து மலமிளக்கி மருந்துகளையும் கொடுப்போம். குழந்தைகள் மாத்திரைகளாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக சிரப்பாக கொடுக்கச் சொல்லப்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிரப்பாக கொடுக்கும்போது அது பற்களில் கறையை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
அதைத் தவிர்க்க குழந்தையின் நாக்கின் பின்பகுதியில் வைத்து அந்த சிரப்பை குடிக்கவைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் பலருக்கும் சரியாக வருவதில்லை. சிரப் கொடுத்த உடனேயே தண்ணீர் குடிக்கச் சொல்லிப் பழக்குவதன் மூலம் பற்களில் கறை படியாமல் காக்கலாம்.
இதையே மாத்திரையாகவோ, கேப்ஸ்யூலாகவோ எடுக்கும்போது இந்தப் பிரச்னை வராது. இரும்புச்சத்து எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகள் சிலருக்கு வயிற்றுவலி, ஏப்பம், வாந்தி போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இந்த உபாதைகளைத் தடுக்க இரவு உணவுக்குப் பின், தூங்கச் செல்வதற்கு முன் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்வோம்.
ஆனால் அதைவிட முக்கியம் அந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியது. வெறும் வயிற்றில் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுக்கும்போது அது உட்கிரகிக்கப்படும் தன்மை அதிகமாக இருக்கும். இப்படி இரும்புச்சத்து சப்ளிமென்ட் எடுப்பதில் பல விஷயங்கள் உள்ளன.
எனவே உங்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவரது பரிந்துரையின் பேரில் சப்ளிமென்ட்டுடன் மலமிளக்கியும் சேர்த்துக் கேட்டு உபயோகிக்கச் சொல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.