கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் 8 நாட்களாக வருமானவரி சோதனை நடந்தது. முதல் நாள் சோதனை அன்று செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டை சோதனையிட முயன்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு அச்சுறுத்தினர். மேலும், அதிகாரிகளின் காரை சூறையாடிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் அதிகாரிகளையும் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதனால், வருமானவரி துறை அதிகாரிகள் ராணுவ பாதுகாப்பை கோரினர். அதன் பேரில் 8 நாட்களாக பலவேறு இடங்களில் நடந்த சோதனையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு கொடுத்தனர். இதற்கிடையே வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டனர்.
மேலும், எட்டாவது நாள் சோதனை முடிந்ததை தொடர்ந்து ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சமந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் எனவும் வருமானவரித் துறை தெரிவித்தனர். இந்த நிலையில் ஐடி ரெய்டின் போது அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது.
திமுகவின் எதிர்க்கட்சி தலைவர்கள் இது சம்மந்தமாக கண்டன அறிக்கை விட்டதோடு திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர். இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது தொடர்பாக பதிலளிக்கக்கோரி மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை திமுக அரசுக்கு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால், தமிழக அரசிடம் இருந்து பதில் அனுப்பப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மீது பட்டிதொட்டியெங்கும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு எழுந்த பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் பூதாகரமானது. சுதரித்துக்கொண்ட அமைச்சர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதனால் ஓரிரு நாட்கள் விஷயம் தெரிந்த மது பிரியர்கள் டாஸ்மாக்கில் 10 கேட்டு வாங்கி பெற்று சென்றனர். இந்த் நிலையில், டாஸ்மாக்கில் 10 ரூபாய் வசூல் மீண்டும் துவங்கி விட்டதாக மதுபிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கரூர் ஐடி ரெய்டின் போது தனது சொந்த பிரச்சினையை கட்சி பிரச்சினையாக மாற்றி கட்சி ஆட்களை ஏவி விட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசு அறிக்கை கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக வந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.