புதுடெல்லி: கடந்த 1991-ம் ஆண்டு நடந்த அவதேஷ் ராய் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கேங்ஸ்டர், அரசியல்வாதி முக்தார் அன்சாரிக்கு வாரணாசி நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கியது.
கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி, காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏவுமான அஜய் ராயின் தம்பி அவதேஷ் ராய், அஜய் ராயின் வீட்டிற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முக்தார் அன்சாரி மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.பி, எம்எல்ஏகளுக்கான வாரணாசி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த 32 ஆண்டு கால பழமையான வழக்கு விசாரணையின் இறுதி வாதங்களை மே 19-ம் தேதி முடிவடைந்தது. தீர்ப்பினை நிறுத்தி வைத்திருந்தந நீதிமன்றம், ஜூன் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்காக கோர்ட் வளாகத்தில் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தநிலையில், அவதேஷ் ராய் கொலை வழக்கில் முக்தார் குற்றவாளி என்றும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு குறித்து அஜய் ராய் கூறுகையில்,”எங்களின் பல வருட கால காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. நான், என்னுடைய பெற்றோர், அவதேஷின் மகள் என எங்கள் மொத்தக் குடும்பமும் பொறுமையுடன் காத்திருந்தோம். அரசுகள் வந்தன சென்றன. இடையில் முக்தார் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். ஆனாலும் நாங்கள் விட்டுவிடவில்லை. எங்களுடைய வழக்கறிஞருடைய முயற்சியால், என்னுடைய சகோதரனின் கொலை வழக்கில் முக்தர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முக்தார் அன்சாரிக்கு எதிரான 61 குற்ற வழக்குகளில், அவதேஷ் ராய் கொலை வழக்குடன் சேர்த்து 5 வழக்குகளில் அவர் குற்றாவளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 20 வழக்குகளில் அன்சாரி மீது விசாரணை நடைபெற்றுவருகிறது. ஐந்து முறை எம்எல்ஏவான முக்தார் அன்சாரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் மற்றொரு கடத்தல் மற்றும் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முக்தார் அன்சாரி, 1996, 2002, 2007, 2012 மற்றும் 2017 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். இதில் கடைசி மூன்று வெற்றிகள் அவர் சிறையில் இருந்தபோது கிடைத்தன.
முக்தார் அன்சார், உத்தரப் பிரதேச மாநில வரலாற்றின் முக்கியமான அரசியல் கொலை ஒன்றிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் என்பவரை ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து 400 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும், கொலையான ராயின் உடலில் இருந்து 21 தோட்டாக்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.