கம்பம் வனப்பகுதியில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட அரிசிக் கொம்பன் யானைக்கு மணிமுத்தாறு அருகே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது…
கேரளாவில் 10 பேரை கொன்ற அரிசி கொம்பன் யானை கடந்த மாதம் 26 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்குள் நுழைந்தது. இதனால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது.
சண்முகா நதி அணையை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த யானையின் கழுத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த ரேடார் கருவி மூலமாக தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், சின்னஓவுலாபுரம் பெருமாள் கோவில் வனப்பகுதிக்குள் அரிசிக் கொம்பன் நுழைந்ததும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிரத்யேகமான ஆம்புலன்ஸ்சில் அரிசிக்கொம்பனை ஏற்றிய வனத்துறையினர், நெல்லை மாவட்டத்திற்கு கொண்டுச் சென்றனர். கடுமையான வெயில் மற்றும் பல மணி நேரமாக நின்ற நிலையிலேயே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்ததால் யானை சற்று மூர்க்க நிலைக்குச் சென்றது. உடனே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆம்புலன்ஸை நிறுத்தி தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அரிசிக் கொம்பனை குளிர்வித்தனர்.
மணிமுத்தாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிசி கொம்பனுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.