திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்து விலகிய,
இன்று அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் உலா வருகின்றன.
திமுகவின் தீவிர விசுவாசியாக இருந்து வெளியேறிய சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது அரசியல் பயணத்தை அதிமுகவில் இருந்துதான் தொடங்கினார். முதன் முதலில் 1977-ல் மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்ற சுப்புலட்சுமி ஜெகதீசன் 1980-ல் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து பல சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் மத்திய, மாநில அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடைசியாக 2021 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் தோற்றார். அவரது தோல்விக்கு மொடக்குறிச்சி நிர்வாகிகளே காரணம் என்று தலைமைக்கு புகார் கடிதமும் அளித்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன். ஆனால், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்தார்.
அப்போது அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில் ‘ தலைவர்
மறைவுக்குப்பின் அவரது விருப்பத்தின்படி மு.க. ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழக பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.
இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஒய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக
தலைவர் ஸ்டாலினுக்கு கடிதத்தை அனுப்பி விட்டேன்’ என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் இன்று மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தாய் கழகமான அதிமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை அவர் மறுத்துள்ளார் என்றும் நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.