புவனேஸ்வர்: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் ரணமே ஆறாத நிலையில், மீண்டும் ஒடிசாவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கியது. ஒடிசாவின் பாலசோரில் அருகே வந்த போது பெங்களூர்- கொல்கத்தா சென்ற ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிர்சேதம் பெரும் அளவில் இருந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இந்த விபத்தில் சிக்கியவர்கள் பலரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மீட்பு பணிகள் முடிந்து தண்டவாள மறுசீரமைப்பு பணியும் முடிந்துள்ளது. விபத்துக்குள்ளான பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒடிசாவின் பர்கார் பகுதியில் சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.