ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று இரண்டு பயணிகள் ரயில்கள், ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ரயில் விபத்தாக பதிவானது. இந்த துயரச் சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்தனர். அதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இத்தகைய சம்பவம் நடந்த மூன்றே நாளில், அதே ஒடிசாவில் சரக்கு ரயில் ஒன்று இன்று காலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பர்கர் மாவட்டத்திலுள்ள டுங்ரி சுண்ணாம்பு சுரங்கத்துக்கும், ACC எனும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனத்துக்கும் இடையிலான குறுகிய ரயில் பாதையில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மொத்தமாக ஐந்து பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த விபத்துக்கும் ரயில்வே துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்திருக்கிறது.
இது குறித்த அறிக்கையில், “பர்கர் மாவட்டத்தின் மெந்தபாலி அருகே உள்ள தொழிற்சாலை வளாகத்திற்குள் தனியார் சிமென்ட் தொழிற்சாலையால் இயக்கப்படும் சரக்கு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. இதில் ரயில்வே துறைக்கு எந்த தொடர்பும் இல்லை. ரோலிங் ஸ்டாக், என்ஜின், ரயில் பெட்டிகள், ரயில் தடங்கள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளும் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படுகின்றன” என்று கிழக்கு கடற்கரை ரயில்வே குறிப்பிட்டிருக்கிறது.