ஒடிசா விபத்து: `அவன் இறக்கவில்லை' – பிணவறையில் வீசப்பட்ட மகன்… பாசப்போராட்டம் நடத்தி மீட்ட தந்தை!

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் ஹெலராம் என்பவர் தன்னுடைய மகன் பிஸ்வஜித் மாலிக்கை (24) கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு சில மணி நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்திருக்கிறது. என்ன செய்வதென புரியாமல் தவித்த ஹெலராம், பிஸ்வஜித் மாலிக்கை செல்போனில் தொடண்டபோது பேச முடியாமல் யாரோ பேசுவதைக் கேட்டிருக்கிறார்.

ஒடிசா ரயில் விபத்து

அடுத்த நிமிடம் பலாஷ் பண்டிட் என்ற ஆம்புலன்ஸ் டிரைவருடன் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு, தன்னுடன் அவருடைய மைத்துனர் தீபக் தாஸை அழைத்துக்கொண்டு, 230 கி.மீ தூரம் பயணித்து சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார். உடனே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளைத் தேடித் தேடி திரிந்திருக்கிறார். ஆனால் எங்கும் அவருடைய மகனைக் காணவில்லை. அங்கிருந்தவர்கள், `ஒருவேளை உங்கள் மகன் இறந்திருந்தால்…. இறந்தவர்களின் உடல்களை பஹானாகா உயர்நிலைப் பள்ளியில்தான் வைத்திருக்கிறார்கள். அங்கு சென்று தேடிப்பாருங்கள்’ எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்துப் பேசிய ஹெலராம், “என்னுடைய மகன் இறந்துவிட்டான் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. தற்காலிகப் பிணவறையாகக் கருதப்பட்ட அந்தப் பள்ளியின் வாசலில் நுழையும்போதுகூட என் மகன் இறக்கவில்லை என்பதை உறுதியாக நம்பினேன். சடலங்கள் இருந்த அறைக்குள் எங்களை அனுமதிக்கவுமில்லை. நீண்ட நேரம் வெளியே காத்திருந்தோம். ஒருகட்டத்தில் இறந்த சடலங்களுக்கு மத்தியில் ஒரு கை நடுங்குவதாகக் கூறப்பட்டது.

ஒடிசா ரயில் விபத்து

உடனே நான், அது என் மகன்தான் என்ற முழு நம்பிக்கையுடன் பார்த்தபோது, உண்மையில் அவன் என் மகனாகவே இருந்தான். பலத்த காயத்துடன், முழு மயக்க நிலையில் உணர்வற்று இருந்தான். உடனே அவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு பாலசூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றோம். அங்கு அவருக்கு சில ஊசிகள் போடப்பட்டன. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர்.

ஆனால் நாங்கள் ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டு அவரை டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸில் காலை 8:30 மணிக்கு கொல்கத்தாவின் SSKM மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுவந்தோம். இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இன்னும் சுயநினைவு திரும்பாத பிஸ்வஜித்துக்கு ஞாயிற்றுக்கிழமை கணுக்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரின் வலது கையில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. எப்படியும் அவனை மீட்டு வந்திடுவோம்” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர்

மயக்க நிலையில் இருந்தவரை இறந்தவராகக் கருதி பிணவறையில் போடப்பட்டது குறித்துப் பேசிய தடயவியல் மருத்துவ நிபுணர் சோம்நாத் தாஸ், “மனிதனுக்கு, அதிர்ச்சி, நீரில் மூழ்குதல் போன்ற திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும்போது ‘சஸ்பெண்டட் அனிமேஷன்’ என்று அழைக்கப்படும் ஒரு நிலை ஏற்படுகிறது. அப்போது ஒரு நபரின் உயிர்சக்திகள் குறைந்தபட்சமாகச் செயல்படும்.

இத்தகைய நிலையில், அதிக எண்ணிக்கையில் காயமடைந்தவர்கள் இருக்கும் சூழலில், அவசரத்தின் காரணமாக, மருத்துவப் பயிற்சியாளர்களுக்குக்கூட உயிர்சக்திகளைக் கூர்ந்து கவனிக்க நேரம் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கலாம். மீட்புப் பணிகள் மருத்துவம் தெரியாத பொதுமக்களால் செய்யப்பட்டிருக்கின்றன. அத்தகைய சந்தர்ப்பத்தில், காயமடைந்த ஒருவர் சுயநினைவின்றி இருந்ததால், அவரை இறந்தவராக அவர்கள் தவறாக நினைத்திருக்கலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.