புவனேஸ்வர்: ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் கிரிமினல்களின் நாசவேலை காரணமா? என்பது குறித்து விசாரிக்க சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷாவின் பாலசோர் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூர்- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிஷா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன.
ஒடிஷா ரயில் விபத்து நிகழ்ந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு முதல் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாலசோரில் முகாமிட்டு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு வந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பாலசோரில் முகாமிட்டிருந்தார்.
பாலசோரில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 50 மணிநேரத்துக்குப் பின்னர் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனிடையே ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணங்கள் கண்டறியப்படவில்லை என நேற்று காலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். ஆனால் சில மணிநேரங்களில் இண்டர் லாக்கிங் பிரச்சனைதான் காரணம் என கண்டறியப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில் ரயில் விபத்துகளுக்கு நாசவேலை உள்ளிட்டவை காரணமா? என்பது குறித்து சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது என மேலும் ஒரு தகவலையும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதே கருத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கூறியிருந்தார். நாசவேலை காரணமா என்பது தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் என தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து நாசவேலை தொடர்பாக கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.