சென்னை: காயிதே மில்லத் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத் 128-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகவலைதளங்களில் வெளியிட்ட பதிவில், ‘‘கல்லூரி படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப் பற்றாளர். ஆட்சிமொழிப் பிரச்சினையில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர். தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெறக் கூடிய அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர்.
அரசியல் நிர்ணய அவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா. ‘இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்துக்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது’ என்று அவரது மறைவின்போது பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம். அவரது பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் கட்சியின் அவைத் தலைவரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ. ஜே.சி.டி.பிரபாகர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் சார்பில் அக்கட்சியினர் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்எல்ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, முகமது ஷாநவாஸ், மதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அக்கட்சியின் முதன்மை துணைத் தலைவரும் வக்ஃபு வாரியத் தலைவருமான அப்துல் ரஹ்மான், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.