குஜராத் அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ், உருது உள்ளிட்ட 8 மொழிகள் தவிர்ப்பு

புதுடெல்லி: குஜராத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ், தெலுங்கு, உருது, அரபு உள்ளிட்ட 8 மொழிப்பாட ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இம்முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி, ஒடியா, சிந்தி, அரபு, உருது, பாரசீகம் ஆகிய மொழிகளை பள்ளிகளில் பயிலும் வசதி உள்ளது. தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் மொழிவழிக் கல்வியும் உள்ளது. குஜராத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டீச்சர்ஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் (டெட்)’ எனப்படும் தகுதித்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலமே தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

இத்தேர்வை மாநில அரசே நடத்தி வந்தது. இதற்கான தகுதி பி.எட் ஆகும். தற்போது இந்த தேர்வு நாளை (ஜூன் 4) நடைபெற உள்ளது. இந்த ‘டெட்’ தேர்வில் இந்த முறை தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 8 மொழிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகைவிடப்பட்டுள்ளது.

இதனால், அம்மொழிகளில் பி.எட் படித்து ஆசிரியர் பணிகளுக்காகக் காத்திருப்போர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் இந்த தேர்வானது கடைசியாக 5 வருடங்களுக்கு முன் 2018-ல்நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடத்தப்படும் ‘டெட்’ தேர்வில் 8 மொழிகள் கைவிடப்பட்டிருப்பது அவற்றின்ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களை பாதித்துள்ளது. இதனால் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து உருது மொழி ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்போர் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி இந்தியமொழிகள் கற்பதற்கான வாய்ப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிற மொழிகள் கைவிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிற மொழிகளை கைவிட்டு ஆங்கிலம், குஜராத்தி, இந்தி ஆகிய 3 மொழிகளை மட்டுமே அரசு முன்னிறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

உருது பள்ளிகள் குறைந்தன

இப்பிரச்சினையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் குஜராத் உயர் நீதிமன்ற வழக்கின் மனுதாரர்கள் வட்டாரம் கூறுகையில், “மாநிலம் முழுவதிலும் அதிகமாக இருந்த உருது பள்ளிகள் குறைந்து தற்போது 10 மட்டுமே உள்ளன. இத்துடன், பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது மொழிப் பாடங்கள் உள்ளன. எனினும், ‘டெட்’ தேர்வில் உருது கைவிடப்பட்டுள்ளதால், அப்பணிக்கான ஆசிரியர்கள் கிடைப்பது சிரமமாகி விடும். இதனால் ஆசிரியர்கள் இல்லை என மாணவர்கள் அதில் சேர மாட்டார்கள். பிறகு மாணவர்கள் சேரவில்லை எனக் கூறி அப்பள்ளிகளை இழுத்து மூடும் வாய்ப்புகள் உள்ளன. இதேநிலை, பிற மொழிகளின் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இதனிடையே, குஜராத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வந்த தமிழ் உள்ளிட்ட மொழிவழிப் பள்ளிகள் (அரசு மற்றும்அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள்) மூடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வந்து குஜராத்தில் பணிபுரியும் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.