கிராண்ட் சதர்ன் ட்ரங்க் சாலை (Grand Southern Trunk Road) என்பதன் சுருக்கமே ஜிஎஸ்டி சாலை (GST Road) ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை எண் 45க்குள் அடங்கும். சென்னை டூ திருச்சி வரை நீண்டு செல்கிறது. சென்னைக்குள் நுழையும் போது கிண்டி வழியாக அண்ணா சாலையுடன் இணைகிறது. அதுவே வெளியே செல்லும் போது பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை என பல்வேறு முக்கியப் பகுதிகளை கடந்து செல்கிறது.
மூச்சு திணறும் ஜிஎஸ்டி சாலைவார இறுதி மற்றும் விடுமுறை தொடங்கும் மற்றும் முடியும் நாட்களில் சென்னையை ஒட்டிய ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் மூச்சு திணற வைக்கும். குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து கிண்டி வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். அதிலும் தாம்பரம் முதல் கிண்டி வரை போக்குவரத்து அதிகமாக காணப்படும்.சென்னையில் போக்குவரத்து நெரிசல்நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனி நபர் வாகனங்களால் சென்னையின் சாலைகள் திக்குமுக்காடி வருகின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜிஎஸ்டி சாலையை விரிவாக்கம் செய்யும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 82 கோடி ரூபாய் மதிப்பில் 12 மீட்டர் அகலத்தில் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை ஆகியவற்றுக்கு இடையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது.
குன்றத்தூர் சாலை மேம்பாலம்ஆனால் இது ஒருவழிப் பாதையாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். போதிய அளவு அகலம் இருப்பதால் தாராளமாக இருவழிப் பாதையாக பயன்படுத்தலாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி செய்தால் கீழே உள்ள ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் குறையும். பீக் ஹவரில் மட்டுமாவது இருசக்கர மற்றும் கார்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஜிஎஸ்டி சாலை விரிவாக்கம்இந்த விஷயத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதி மற்றும் உள்ளூர் மக்கள் தொடர் குரல் எழுப்பியதன் விளைவாக புதிய திட்டம் ஒன்று கையிலெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மேம்பாலத்திற்கு கீழே உள்ள ஜிஎஸ்டி சாலையை விரிவாக்கம் செய்வது. இதற்காக பாதுகாப்புத் துறையின் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சிஇதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் 15.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டுமானங்களை இடிப்பது, நிலங்களை கையகப்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்த முடியும். அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த பின்னர், ஜிஎஸ்டி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது. இதன்மூலம் தாம்பரம் முதல் கிண்டி வரையிலான சாலையில் சற்றே மூச்சு விடும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் குறையும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.