சென்னை: தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அறிவியல் வளர்ச்சி, மானுடவியல், மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும். இந்த விருது, ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். https://awards.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விரிவான தன் விவரக்குறிப்பு, அதற்கான ஆவணங்களுடன் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழக அரசால் நியமிக்கப்படும் தேர்வுக் குழு தகுதியான நபரை தேர்வு செய்யும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.