தமிழ்நாட்டில் உள்ள 5329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 500 கடைகள் மூடப்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. எந்தெந்த கடைகள் என்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
அண்மை காலமாகாவே மதுவிலக்கு துறை மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதுவிலக்குத் துறை தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பலதரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
அதேபோல் டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தார். இந்நிலையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 500 கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது வரவேற்பு பெற்றுள்ளதுடன், விமர்சனங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.