பட்டுக்கு உலக அளவில் பெயர் பெற்ற நகரம் காஞ்சிபுரம். பட்டுச் சேலைகள் வாங்குவதற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வருகின்றனர். இதேபோல, கோயில் நகரம் என்ற பெருமையும் பெற்றது காஞ்சி. காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் என பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்கள் இருப்பதால், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாகவே இருக்கும்.
மேலும், காஞ்சிபுரம் நகரை சுற்றி அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மாங்கால் கூட்டுச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் மக்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப, போக்குவரத்து கட்டமைப்புகள் செய்யப்படாததால், நெரிசல் மிகுந்த நகரமாக மாறியுள்ளது காஞ்சிபுரம்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மேட்டுத்தெரு, விளக்கடி கோயில் தெரு, உலகளந்த பெருமாள் கோயில் தெரு, கீரை மண்டபம், காமராஜர் தெரு, காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது.
வாகனப் பெருக்கத்தின் காரணமாக, காந்தி சாலை உள்ளிட்ட ஒருசில இடங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல, சுற்றுலா வரும் வேன், தொழிற்சாலை பேருந்துகள் நகருக்கு வெளியே நிறுத்தப்படுகின்றன. இதுபோன்ற ஒருசில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நெரிசல் பிரச்சினை முழுமையாக தீரவில்லை. அதிலும் முக்கியமாக, திருவிழா காலங்களில் பொதுமக்கள், பக்தர்கள் கடுமையான நெரிசலில் சிக்கி பெரிதும் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டுமானால், முதல் நடவடிக்கையாக நகரின் மையத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியில் கொண்டு செல்ல வேண்டும் என்பது பெரும்பாலான பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டு செல்வதற்கான முயற்சிகள் கடந்த 6 ஆண்டுகளாக எடுக்கப்பட்டும்கூட, இடம் தேர்வு செய்வதில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, இப்பணிகள் இன்னும் தொடங்கப்படாமலே உள்ளன.
இது ஒருபுறம் இருக்க, வந்தவாசி மார்க்கத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூர் செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் பகுதிக்கு வராமல் செல்ல, வெளிவட்டச் சாலைகள் இருக்கின்றன. அந்த சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டு, தேவையற்ற வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழையாமல் வெளிப்புறமாக செல்வதை காவல் துறை கண்காணித்தாலே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்ற கருத்தும் உள்ளது.
பட்டுச் சேலை எடுக்க வரும் வியாபாரிகள், வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்தும் இடத்தை காஞ்சிபுரம் நகருக்குள் ஏற்படுத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, அந்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதவிர, மழைக் காலங்களில் திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் இருந்து வெளியேறும் நீர், சாலைகளில் தேங்குவதும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்பிரச்சினைகளை சரிசெய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அவர்கள் கூறுவதாவது:
பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன்: மாநகராட்சியாக ஆகிவிட்டாலும் கூட காஞ்சிபுரம் இன்னும் பழைய நகரமாகவே இருக்கிறது. வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, நகரை மறுகட்டுமானம் செய்ய வேண்டும். காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் எதிர்பாராதவிதமாக ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால், வாகனங்கள் கடந்து செல்வதற்கு வேறு இணைப்பு சாலைகள் கிடையாது. எனவே, உடனடியாக இணைப்பு சாலைகளை ஏற்படுத்த வேண்டும். வெளிவட்டச் சாலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
காஞ்சியில் சுவாமி ஊர்வலங்கள் செல்லும் மாடவீதிகள்தான் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், திருவிழாக்கள் நடைபெறும் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலும் தீராப் பிரச்சினையாக உள்ளது. எனவே, திருவிழா காலங்களில் வாகன நெரிசலை சரிசெய்வது குறித்தும், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
பகத்சிங் நெசவாளர் பாசறை அமைப்பின் தலைவர் கோ.ரா.ரவி: வாகனங்கள் நிறுத்தும் இடவசதி இல்லாமலே பல வணிக வளாகங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கு வரும் பொதுமக்கள், சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, வணிக வளாகங்களில் வாகன நிறுத்த வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கடைகளுக்கு வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்த, தனி இடம் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்’ – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது, ‘‘மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வெளியூர் வாகனங்கள் அனைத்தும் வெளிவட்டச் சாலைகள் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம். திருவிழா காலங்களில் நகருக்கு வெளியில் தற்காலிக பேருந்து நிறுத்தங்களை அமைத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துகிறோம்.
நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைப்பது, வெளிவட்டச் சாலைகளை விரிவுபடுத்துவது ஆகியவை தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதெல்லாம் செயல்பாட்டுக்கு வந்தால் காஞ்சிபுரத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும்’’ என்றார்.