மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் அமர்சின்ஹா தோரட்(30). கோலாபூரில் தங்கி படித்து வந்தார். இவரது சொந்த ஊர் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோட்ஹிந்தி என்ற கிராமம் ஆகும். தோரட் தனது சொந்த கிராமத்திற்கு சென்று தனது தந்தையிடம் அதிக விலையுள்ள மொபைல் போன் வாங்க ரூ.1.5 லட்சம் பணம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபத்தில் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனது மகன் தோரட்டை தந்தை அடித்தார். அவருடன் சேர்ந்து இளைய மகனும் தனது அண்ணனை தாக்கினார். இதில் தோரட் இறந்து போனார்.
உடனே இருவரும் சேர்ந்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாம்னி என்ற கிராமத்தில் உள்ள சாலையோரம் இருந்த புதரில் தூக்கிப்போட்டனர். சாக்குமூட்டை சந்தேகத்திற்கு இடமான முறையில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அதனை திறந்து பார்த்த போது உள்ளே தோரட் உடல் இருந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்து கிடந்தது யார் என்று அடையாளம் காணப்பட்டது.
தோரட் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. உடனே கிராமத்திற்கு சென்ற போலீஸார் தோரட்டின் தந்தை மற்றும் இளைய சகோதரனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். என்ன காரணத்திற்காக தோரட் கொலை செய்யப்பட்டார் என்ற விபரத்தையும் இருவரும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.