இம்பால்: மணிப்பூர் இன வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த அஸ்ஸாம் மாநில குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் மைத்தேயி இனத்தவரை, எஸ்டி பட்டியலில் சேர்க்க அம்மாநில ஆளும் பாஜக அரசு முயற்சித்தது. இதற்கு மணிப்பூர் உயர்நீதிமண்ற தீர்ப்பும் அடிப்படையாக இருந்தது. ஆனால் மணிப்பூரில் பழங்குடியினத்தவராகிய குக்கி, நாகா இன மக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு போராட்டம் மிகப் பெரும் இன மோதலாக வெடித்தது. குக்கி இனத்தின் ஆயுதக் குழுவினர் மைத்தேயி மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.
இதனால் ஒரு மாத காலத்துக்கும் மேலாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மைத்தேயி இன மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். குக்கி இனத்தவரும் அகதிகளாக தொப்புள் கொடி உறவுகள் உள்ள மிசோரம் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர மத்திய அமைச்சர் அமித்ஷா அங்கு முகாமிட்டு பல்வேறு ஆலோசனைகள், சந்திப்புகளை மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்திருந்தார். மேலும் 6
வன்முறை வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் எனவும் உறுதி அளித்தார் அமித்ஷா.
இதனடிப்படையில் தற்போது குஹவாத்தி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையமானது மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரித்து விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.
இதனிடையே மணிப்பூரில் குக்கி இன மக்கள் விதித்திருந்த 1 மாத கால பொருளாதாரத் தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. குக்கி இனத்தவரின் இந்த முடிவால் மணிப்பூரில் நெருக்கடி, வன்முறைகள் முடிவுக்கு வந்து இயல்பு நிலைமை திரும்பும் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு ஹிமான்ஷு சேகர் தாஸ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். 03.05.2023 அன்றும், அதன்பின்னரும் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த குழு விசாரிக்கும்.
மணிப்பூரில் நடந்த வன்முறை, அது பரவியதற்கான காரணங்கள் குறித்தும், பொறுப்பான அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆணையம் விசாரிக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கு நிலைமையை ஆய்வு செய்த பின்னர், இந்த விசாரணை ஆணையத்தை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆணையத்தின் முதல் அமர்வு நடைபெறும் தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள், அது தனது அறிக்கையை கூடிய விரைவில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும். ஆணையத்தின் தலைமையகம் இம்பாலில் செயல்படும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.