தமிழகத்தில் மனித உயிர்களை உறிஞ்சிக்கொண்டிருந்த ஆன்லைன் ரம்மி சில நாட்களுக்கு முன்புதான் தடை செய்யப்பட்டது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இதுவரை ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஆன்லைன் ரம்மிக்கு ஒரு குடும்ப தலைவி அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியது.
மணலியை சேர்ந்த பவானி (29) என்ற பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அக்கவுண்டில் இருந்த பணத்தை வைத்து ரம்மி விளையாடி நஷ்டம் அடைந்தார். அதன் பின்னர் வீட்டில் இருந்த 20 சவரன் நகைகளையும் விற்று ரம்மி விளையாடி தோற்றார். கடைசியில் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
<p>பவானி</p>
தமிழகத்தில் ரம்மி தற்கொலைகள் நெஞ்சங்களை உலுக்கி கொண்டிருக்க நடிகரும், அரசியல் தலைவருமான சரத்குமாரின் ரம்மி விளம்பரம் டிவி-யிலும், பத்திரிகையிலும், செல்போனிலும் ஓடி கொண்டிருந்தது. இது கடுமையான விமர்சனங்களை கிளப்பியது. அதுகுறித்து சரத்குமாரிடம் கேட்டதற்கு, ‘ ரம்மியை தடை செய்யுங்கள்.. தடை செய்துவிட்டால் நான் ஏன் நடிக்க போகிறேன்’ என்று குதர்க்கமாக கூறினார்.
சரத்குமார் ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் பணத்துக்காக நடிக்கிறார் என்று கடந்து விடலாம்.. ஆனால், பொது வாழ்க்கையிலும் இருப்பதால் தான் அவரது ரம்மி விளம்பரம் பேசு பொருளானது. இந்த நிலையில் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சரத்குமாரை மறைமுகமாக வெளுத்து வாங்கியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பசுமை விகடன் எடுத்து வெளியிட்டு வரும் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதில் கருணாஸ் விவசாயம் செய்யும் வீடியோவும் ஒன்று. இந்த நிலையில் பசுமை விகடன் அண்மையில் விவசாயத்தை சார்ந்தவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளது. அதில் சிறப்பு விருந்தினரான கருணாஸ் கலந்துகொண்டு உரையாடினார்.
அப்போது கருணாஸ் பேசுகையில், பதுமை விகடன் எடுத்துள்ள 700 வீடியோவில் அதிகமாக பார்க்கப்பட்டது என்னுடைய வீடியோதான்.. அதற்காக நான் பெரிய ஆள் கிடையாது.. என்னை விட பெரிய ஆட்களுடைய வீடியோக்களும் பசுமை விகடன் எடுத்துள்ளது. ஆனால் என்னுடைய வீடியோவை அதிகம்பேர் பார்த்துள்ளார்கள். அதற்கு சில விவசாயிகள் ‘ நாங்கள் இவ்வளோ நாள் கஷ்டப்படுகிறோம் எங்களது வீடியோக்களை போடாமல் சினிமாக்காரன் வீடியோவை போடுகிறீர்களே’ என்று கேட்கிறார்கள்… ஒரு விஷ புழு மருந்தை விற்க ஒரு நடிகனை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்… உங்கள் காசை உங்களிடம் இருந்து பிடுங்க ரம்மி விளையாட வைக்க ஒரு நடிகர் தேவைப்படுகிறான்… இந்த மாதிரி நடிகருக்கு மத்தியில் விவசாயிகூட சேர்ந்து அவரது வாழ்க்கையை வாழ முயற்சி எடுக்கும் எனது வீடியோவை பார்த்து சந்தோசம்தானே நீங்கள் பட வேண்டும்..’ என கருணாஸ் பேசினார்.