பெரம்பலூர்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருச்சி அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது தனியார் ஆம்னி சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
திண்டுக்கல்லை சேர்ந்த நாகசாமி என்பவர் தனது உறவினர்களுடன் திருவண்ணாமலைக்கு வேனில் சென்றார். பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் இருந்து மீண்டும் திண்டுக்கல்லுக்கு வேனில் திரும்பி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயற்சி செய்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் நடுவே உள்ள செண்டர் மீடியனின் ஏறி நின்றது. இந்த விபத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் , டிராக்டரை ஓட்டி வந்த சாமிதாஸ் என்பவரும் அவருடன் சென்ற சேகர் என்பவரும் படு காயம் அடைந்தனர். பயணிகள் வேனில் வந்தவர்களும் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் காயம் அடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு இருந்த போது , அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் குப்புசாமி மற்றும் அவரது பேத்தி கவிப்ரியா, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.