திருப்பூரைச் சேர்ந்த வெற்றி அமைப்பு மூலம் வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டு, திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட வைத்து அதை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நினைவாக தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் மூலம் 2015 முதல் கடந்த 8 ஆண்டுகளில், 16 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், 9-ஆவது ஆண்டு தொடக்க விழா, திருப்பூர் அடுத்துள்ள சோளிபாளையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தமிழ்வேந்தன், மேட்டுப்பாளையம் வனக் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சுருளியப்பன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு, வனத்துக்குள் திருப்பூர் 9-ஆவது ஆண்டு தொடக்க விழாவை தொடக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் பேசுகையில், ”8 ஆண்டுகளில் 16 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளது வனத்துக்குள் திருப்பூரின் மாபெரும் சாதனையாகும். மரம் வளர்ப்பு என்பது அறப்பண்பு ஆகும்.
தமிழர்களின் பண்பாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பல்லுயிர் ஓம்புதலும் வாழ்வின் அங்கமாக இருந்துள்ளது. தனிமனித ஒழுக்கமும், கட்டுப்பாடும், தார்மீக பொறுப்பும்தான் இயற்கையை மீட்பதற்கான ஒரே வழியாகும். மழை நீர் சேமிப்பை இயக்கமாக அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும். மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்று சொல்லாக இல்லாமல், செயலாக மாற்றப்பட வேண்டும்” என்றார். இந்த விழாவில், வனத்துக்குள் திட்ட இயக்குநர்கள் சிவராம், கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் குமார்துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.