புதுடில்லி: சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளதால், இந்தியாவில் எரிபொருட்கள் விலையை மாற்றுவதில் தாமதம் ஏற்படலாம் என, தொழிற்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கான ‘ஒபெக் பிளஸ்’ கூட்டமைப்பு, 2024ம் ஆண்டு இறுதி வரை, ஏற்கனவே அறிவித்துள்ளபடி, எண்ணெய் உற்பத்தி குறைப்பை தொடர முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவும், வருகிற ஜூலை மாதம் முதல், எண்ணெய் உற்பத்தியில், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களை குறைக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்து உள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு, தற்போதைய விலையிலிருந்து, ஒரு அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. அதிகாலை வர்த்தகத்தில், ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 77.64 டாலரில் இருந்து, 78.73 டாலராக உயர்ந்தது.
இந்த விலை ஏற்றம், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, இந்திய சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக, அதாவது 5,976 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டபோதிலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், விலையை சம விகிதத்தில் வைத்திருப்பதால், இழப்புகளை ஈடு செய்து வருகின்றன.
கடந்த மாதம், சர்வதேச எண்ணெய் விலையும், சில்லரை விற்பனை விலையும் சமமாக வந்தன. ஆனால், தற்போதைய விலை ஏற்றத்தால், மீண்டும் சில்லரை விற்பனை விலை உயரும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்தியா தன் எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.
பொதுத்துறை எரிபொருள் சில்லரை வர்த்தக நிறுவனங்கள், சர்வதேச எரிபொருட்களின் விலையின் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒரு முறை விலையை மாற்றிஅமைக்க வேண்டும்.
ஆனால், கடந்த 2022, ஏப்ரல் 6ம் தேதி முதல், விலை மாற்றங்கள் செய்யப்படவில்லை. சர்வதேச விலை உயர்வின் போதும், நுகர்வோரின் நலன்
கருதி, எரிபொருளுக்கான கலால் வரியை, கடந்த ஆண்டு மே மாதம் அரசு குறைத்தது.சீனாவின் பொருளாதாரம், அமெரிக்க வங்கிச் சிக்கல்கள், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பிற்கு வெளியே, அமெரிக்கா, கனடா, பிரேசில், நார்வே மற்றும் கயானா உள்ளிட்ட நாடுகளில் வலுவான எண்ணெய் உற்பத்தி வளர்ச்சி போன்ற காரணங்களினால், எண்ணெய் சந்தை தலைகீழாக மாறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்