கடந்த மாதம் நடந்து முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13-வது லீக் போட்டியில் கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது அந்த ஓவரை யாஷ் தயாள் வீச, கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார் ரிங்கு சிங். இதன் காரணமாக யாஷ் தயாளை அடுத்தடுத்தப் போட்டிகளில் களமிறக்கவில்லை குஜராத் அணி. அவரும் உடல்நலப் பாதிப்பால் சில போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். அப்போது யாஷ் தயாளுக்கு ஆதரவாகப் பலரும் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையில் யாஷ் தயாள், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.
இன்று காலை யாஷ் தயாள், இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையில் கார்ட்டூன் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அந்த கார்ட்டூனில், ‘பல இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்திக் கொலை செய்வதைத் திட்டமாக வைத்துச் செயல்படும் இஸ்லாமியர் ஒருவர், கத்தியைத் தனக்குப் பின்னால் மறைத்து வைத்து மற்றொரு பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தி பலியாக்க முயல்கிறார். அந்தப் பெண்ணும் தன் கண்களைக் கட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக அந்த இஸ்லாமிய நபரின் காதல் வலையில் வீழ்வதுபோல அந்தக் கார்ட்டூன் வடிவமைக்கப்பட்டுள்ளது’.
‘லவ் ஜிகாத்’, அதாவது இஸ்லாமிய இளைஞர்கள் திட்டமிட்டு இந்துப் பெண்கள் மற்றும் வேறு மதத்தின் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி தங்கள் மதத்திற்கு மதம் மாற்றி வருகிறார்கள் எனப் பல இந்து அமைப்பினர் சமீபகாலமாக பெரும் சர்ச்சைக் கிளப்பி வருகின்றனர். இதுபோன்ற போலியான மதவெறுப்புப் பிரசாரங்கள் சமூக வலைதளங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை தீயாய்ப் பரவி வருகின்றன. பாலிவுட்டில் பல திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் எனப் பலரும் இந்தச் சர்ச்சைகளைக் கிளப்பிய வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படமும் இதே சர்ச்சைக்குரிய கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது கிரிக்கெட் வீரரான யாஷ் தயாள் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் யாஷ் தயாளின் இந்தப் பதிவிற்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்புகளின் விளைவாக யாஷ் தயாளும் தனது பதிவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலிருந்து நீக்கியுள்ளார்.
அதன்பின் உடனே, “மன்னித்துவிடுங்கள், தவறுதலாக நான் அதைப் பதிவிட்டுவிட்டேன். எல்லா சமுதாயத்தினரையும் நான் மதிக்கிறேன். தயவு செய்து, என்னை வெறுத்துவிடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.