பாலசோர் : ”ஒடிசா ரயில் விபத்துக்கு, சதி திட்டமும் காரணமாக இருக்கலாம். விசாரணைக்குப் பின் இதில் முழு விபரம் தெரியவரும். இந்த விபத்து குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், இரண்டு பயணியர் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில், கடந்த, 2ம் தேதி இரவு விபத்தில் சிக்கின.
‘கவச்’ எனப்படும் பாதுகாப்பு சாதனம் பொருத்தப்படாததே இந்த ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
பாதுகாப்பு
மீட்புப் பணிகள் முடிந்து, ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த மூன்று நாட்களாக அங்கு முகாமிட்டு, மீட்புப் பணி மற்றும் சீரமைப்பு பணிகளை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கவனித்து வருகின்றனர்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியுள்ளதாவது:
கவச் என்ற பாதுகாப்பு சாதனத்துக்கும், இந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விபத்து, ‘இன்டர் லாக்கிங்’ என்ற தொழில்நுட்ப பிரச்னை மற்றும் ‘எலக்ட்ரிக் பாயின்ட்’ இயந்திரம் தொடர்பானது.
இந்த எலக்ட்ரிக் பாயின்ட் சாதனம் தான், சிக்னல் முறையாக இயங்குவதற்கு முக்கியமாகும்.
இந்த எலக்ட்ரிக் பாயின்ட் சாதனத்தின் அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு சதி திட்டம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்த பிறகுதான், இதில் முழுமையான விபரங்கள் தெரிய வரும்.
தற்போதைய நிலையில், விபத்துக்கான மூல காரணம் என்ன மற்றும் அதற்கு காரணமானவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து முழுமையாக, தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம் என, ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.பி.,யும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது:
தற்போதைய நிலையில் மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. ரயில் பாதை சீரமைப்பு பணிகள், இரவு பகலாக நடந்து வருகின்றன.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் இது முடிக்கப்பட்டு, ரயில்கள் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியை, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார்.
மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
விபத்து நடந்ததும், உடனடியாக மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்காக ஒடிசா முதல்வருக்கும், ஒடிசா மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே புதுடில்லியில் பேட்டியளித்த, காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவண் கேரா, ”விபத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
”அப்படியானால், முதலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீதுதான் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இந்த ரயில் விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சி.ஏ.ஜி., அறிக்கை கூறுவது என்ன?
ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமை தணிக்கையாளர் அறிக்கை, கடந்தாண்டு செப்.,ல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரயில்வே பாதுகாப்பில் பல குளறுபடிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்கள் தடம் புரள்வது மற்றும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை தடுப்பதற்கு சரியான நடைமுறைகள் உருவாக்கப்படவில்லை. ரயில் பாதைகள் பராமரிப்பு தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. இதற்கு முந்தைய தடம் புரள்வது மற்றும் விபத்து குறித்த விசாரணை அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள எந்த ஒரு பரிந்துரையும் ஏற்கப்படவும் இல்லை; செயல்படுத்தப்படவும் இல்லை.முக்கிய மற்றும் அவசர பணிகளுக்கான நிதி முறையாக பயன்படுத்தவில்லை. ரயில் பாதைகளை மாற்றி அமைப்பதற்கான நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்த போதிய ஊழியர்கள் இல்லை.ரயில் பாதைகள் கண்காணிப்புக்கான ஆய்வுகள் நடத்தப்படுவதில், 30 – 100 சதவீத குறைபாடுகள் உள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘டிரைவர் மீது தப்பில்லை’
விபத்து குறித்து ரயில்வே வாரியத்தின் சிக்னல் பிரிவின் முதன்மை செயல் இயக்குனர் சந்தீப் மாத்துார், செயல்பாடு மற்றும் வர்த்தக மேம்பாட்டு பிரிவின் உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா ஆகியார் நேற்று கூறியுள்ளதாவது:இந்த விபத்தில் மூன்று ரயில்கள் சிக்கியுள்ளன. ஆனால், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ரயில், மாற்றுப் பாதையில் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது.இந்த விஷயத்தில், ரயில் டிரைவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. சிக்னல் கிடைத்ததால்தான் அவர் சென்றுள்ளார். மேலும், இந்த மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வேகம், மணிக்கு 130 கி.மீ., ஆகும். இந்த ரயில், 128 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளது. அதனால், வேகக் கட்டுப்பாட்டையும் கோரமண்டல் ரயில் டிரைவர் மீறவில்லை.இன்டர் லாக்கிங் முறை என்பது சிறப்பான ஒன்று. ஒருவேளை இதில் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக அனைத்து சிக்னல்களும் சிவப்பாக மாறிவிடும். இதையடுத்து அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும். சிக்னல் செயல்பாட்டில், ‘பாயின்ட் மெஷின்’ என்பது மிகவும் முக்கியமாகும். அது காட்டும் வழியில்தான், ரயில் டிரைவர், ரயிலை இயக்குவார். எதிரே உள்ள பாதையில் வேறு எந்த ரயிலும் இல்லை, நேராக செல்லலாம் என்பதை குறிக்க, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்படும். ஒருவேளை எதிரே உள்ள பாதையில் மற்றொரு ரயில் நிறுத்தப்பட்டிருந்தால், ‘லுாப் லைன்’ எனப்படும் மாற்றுப் பாதையில் செல்ல, ஆரஞ்ச் நிற சிக்னல் கொடுக்கப்படும்.ஆனால், சிக்னல் பாயின்ட் இயந்திரத்தில் சில தவறுகள் நடந்துள்ளன. பாயின்ட் மெஷின் தவறான பாதையை காட்டியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘இன்டர் லாக்கிங்’ என்றால் என்ன?
‘எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்’ என்பது ரயில்களை பாதுகாப்பாக இயக்க, ரயில்வே கையாளும் இயந்திர தொழில்நுட்ப கட்டமைப்பு. இது இயந்திரவியல், மின்னியல் மின்சாரவியல் தொடர்புடையது. ஒரு ரயிலை உள்ளே வரவழைப்பதற்கு அல்லது அனுப்புவதற்கு தேவைப்படும் பாய்ன்டுகள், போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், ரயில் பாதையை மாற்ற வேண்டிய இடத்தில் பாதையைப் பூட்டி, ரயில்கள் அதன் மீது செல்ல அனுமதிக்கும் சிக்னல் முறை. இதுவே இன்டர்லாக்கிங் என அழைக்கப்படுகிறது.இதில், 1, 2, 3 என பல வகைகள் உள்ளன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும்போது. அதற்கு ஏற்றார்போல், இந்த இன்டர் லாக்கிங் தரமும் உயர்த்தப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்