சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) இயக்குநரும், ரஜினிகாந்த்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் இட்டிருக்கும் பதிவு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்தபோது அவரை ஹீரோவாக வைத்து 3 படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக படம் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக டீசண்ட் விமர்சனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார்.அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.
தனுஷுடன் பிரிவு: தனுஷுடன் சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது. இருவரும் தனித்தனி பாதையில் செல்வதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இருப்பினும் இருவரும் சட்டப்பூர்வமாக இன்னமும் விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.திருமண வாழ்க்கை முறிவுக்கு பிறகு சில காலம் அமைதியாக இருந்த ஐஸ்வர்யா இப்போது சினிமா இயக்கத்தில் மீண்டும் இறங்கியுள்ளார்.
லால் சலாம்: அதன்படி அவர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் படத்தை இயக்கிவருகிறார். இதில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகிவரும் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. ரஜினி உள்ளிட்டோருடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் உருவாகிறது.
மொய்தீன் பாய்: ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவரது கேரக்டர் லுக் வெளியிடப்பட்டபோது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இருப்பினும் கபில்தேவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ரஜினியின் கெட்டப்புக்கு தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. இப்போது புதுச்சேரியில் நடப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படமானது வெளியாகவிருக்கிறது.
ஐஸ்வர்யா இன்ஸ்டா: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்களை பார்த்து வளர்ந்தேன்… ஆனால் ஒரு நாள் உங்களை வைத்து படம் இயக்குவேன் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. உங்களுடன் சேர்ந்து இந்த உலகை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் அப்பா…. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயிலர்: முன்னதாக, ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. ஜெயிலரில் தமன்னா, மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.