இம்பால், மணிப்பூரில், போலீசாருக்கும், ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாக வதந்தி பரவியதை அடுத்து, ‘இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ராணுவம் எச்சரித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
இதில் ஏராளமான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரம் கட்டுக்குள் வந்த நிலையில், பாதுகாப்புக்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் பல இடங்களில் ராணுவத்துக்கும், மாநில போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதாகவும், இதில் ராணுவ வீரர் ஒருவர் இறந்து விட்டதாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாக நேற்று வதந்தி பரவியது.
போலீசாருக்கும், ராணுவத்தினருக்கும் வாக்குவாதம் நடப்பது போன்றும், போலீஸ் ஸ்டேஷனை மறைத்து ராணுவ டிரக் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்ற வீடியோக்களும் வெளியாகின.
இதையடுத்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் எந்த பகுதியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.
முக்கிய சாலைகளில் கிராம மக்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இவற்றை அகற்றும்படி ராணுவ வீரர்கள், போலீசாரிடம் கூறிய காட்சிகளை வேறு மாதிரியாக சித்தரித்து, பொய்யான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன. இவற்றை மக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வன்முறை கும்பலின் முகாம் எரிப்பு
மணிப்பூரில் கூகி சமூகத்தைச் சேர்ந்த சிலர், ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், சில நாட்களுக்கு முன், காக்சிங் மாவட்டத்தில், மற்றொரு சமூகத்தினருக்கு சொந்தமான குடிசைகளை தீ வைத்து எரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், நேற்று சுக்னு என்ற இடத்தில் இருந்த ஆயுத போராட்ட குழுவின் முகாமை தீ வைத்து எரித்தனர். இதற்கிடையே, மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடப்பதால், பதற்றம் நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்