சென்னை: Sai Pallavi (சாய் பல்லவி) நடிகை சாய் பல்லவி அல்லு அர்ஜுனிடம் தான் உங்களது தீவிர ரசிகை என பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிறந்த சாய் பல்லவிக்கு மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வம்போன்று நடனத்தின் மீதும் இருந்தது. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது. சாய் பல்லவியின் நடனத்தில் அவ்வளவு எனர்ஜி இருக்கும்
சினிமா எண்ட்ரி: நடனத்தில் கலக்கிய அவர், தாம் தூம் படத்தில் ஒரு சில நொடிகள் தலை காண்பித்தவருக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. ஆனால் அவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது.
மனதை திருடிய மலர் டீச்சர்: குறிப்பாக முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் ரசிக்க ஆரம்பித்தனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
முன்னணி நடிகை: பிரேமம் கொடுத்த கிரேஸை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அவர் நடித்த பல படங்கள் கலவையான விமர்சனங்கலை பெற்றாலும் சாய் பல்லவியின் நடிப்பு மட்டும் மெருகேறிக்கொண்டே சென்றது. அப்படி அவர் நடிப்பில் வெளியான முக்கியமான படம் கார்கி. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தை சாய் பல்லவியின் நடிப்பு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. படத்தில் நடித்ததற்காக பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.
புஷ்பா 2வில் சாய் பல்லவி: தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை கெட்டியாக பிடித்து வைத்திருக்கிறார். இதன் காரணமாக அங்கும் பல படங்களில் கமிட்டாகிறார். அந்தவகையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், நிச்சயம் அவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
சாய் பல்லவியின் கனவு: இந்நிலையில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் அல்லு அர்ஜுனிடம் பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “அல்லு அர்ஜுன் சார் உங்கள் நடனத்தின் மிகப்பெரிய ரசிகை நான். அதுபற்றி உங்களுக்கு தெரியாது. நான் பள்ளி படிக்கும்போது உங்களது பாடல்களுக்கு நடனம் ஆடியது இன்னமும் நியாகபம் இருக்கிறது. இப்போது ஒரு கனவு போன்று இருக்கிறது. இப்போது அது நனவாகியிருக்கிறது” என்றார்.