புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் இருந்து முன்னணி வீராங்கனையான சாக்ஷி மாலிக் விலகியதாக வெளியான தகவலை சாக்ஷி மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராடி வருகின்றனர். தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதிய நாடாளுமன்றம் நோக்கில் பேரணி செல்லவும் முயன்றனர். அதன் காரணமாக காவல்துறையின் கைது படலத்திற்கும் ஆளாகினர். தொடர்ந்து கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய அரசுக்கு கெடு விதித்தனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சாக்ஷி, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்தனர். அந்த சமயத்தில் பிரிஜ் பூஷன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சொல்லி போலீஸாரை வலியுறுத்தவும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த தகுந்த ரியாக்ஷனை அமைச்சர் தரப்பில் இருந்து பெறவில்லை என சாக்ஷியின் கணவர் சத்யவ்ரத் காடியன் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பு டெல்லியில் உள்ள அமைச்சர் அமித் ஷாவின் அரசு இல்லத்தில் நடந்ததாக தெரிகிறது. ‘விசாரணை மீது நம்பிக்கை வையுங்கள். சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என அமித் ஷா அப்போது தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில்தான் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது. மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பிரதான பங்கு வகித்து வருபவர் சாக்ஷி மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதில் இல்லை என்றால், இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு எப்படி செல்லும் என்பதில் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், “நான் போராட்டத்தில் இருந்து விலகியதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. நாங்கள் ஒருபோதும் பின்வாங்கவும் மாட்டோம். அறவழியில் நாங்கள் மேற்கொண்டு வரும் சத்தியாகிரகத்துடன், ரயில்வே துறையில் எனது பணிக்கான பொறுப்பைச் செய்து வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்” என சாக்ஷி ட்வீட் செய்துள்ளார்.
30 வயதான சாக்ஷி மாலிக், ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம், 2022 காமன்வெல்த்தில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2017-ல் சக மல்யுத்த வீரர் சத்யவ்ரத் காடியனை திருமணம் செய்து கொண்டார். வடக்கு ரயில்வே பிரிவில் வங்கி பிரிவில் பணியாற்றி வருகிறார்.