திருவள்ளூர்:
ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்ட அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாக, திருவள்ளூரில் ரயிலை கவிழ்க்க பெரிய மரத்தை தண்டவாளத்தில் மர்மநபர்கள் வைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் கடந்த வாரம் நேரிட்ட பயங்கர ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் கூட, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்கள் ஒருபுறம் இருக்க, இந்த விபத்தில் தங்கள் கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் என ரத்த உறவுகளை பறிகொடுத்து நூற்றுக்கணக்கானோர் நிர்கதியாக நிற்கின்றனர். இன்னும் பலர் கை, கால்களை இழந்து நிரந்தர ஊனமாகிவிட்டனர். இதனிடையே, இந்த விபத்து சதிவேலையாக இருக்கும் என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாக, பகீர் சம்பவம் ஒன்று திருவள்ளூரில் நடந்திருக்கிறது. ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று இரவு பெரிய மரத்தண்டை மர்மநபர்கள் போட்டுச் சென்றிருக்கின்றனர். பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் இந்த மரம் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து அந்த மரத்தை அங்கிருந்து அகற்றினர். ஒருவேளை, மரம் அகற்றப்படாமல் இருந்திருந்தால் பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தமிழக ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீஸார், இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இதற்காக அந்தப் பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக, ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்ததற்கு அடுத்த தினம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்காக பெரிய டயர் ஒன்று தண்டவாளத்தில் போடப்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு டயர் அங்கிருந்து அகற்றப்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.