ரிச்மாண்ட்: அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் ரிச்மாண்ட் எனுமிடத்தில் உள்ள வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.
அந்த வளாகத்தில் உள்ள அல்டீரியா தியேட்டர் எனும் அரங்கில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் வெளியேவரும்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரிச்மாண்ட் போலீஸ் தலைவர் ரிக் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.
இறந்தவர்கள் இருவரும் ஆண்கள். ஒருவருக்கு வயது 18. மற்றொருவருக்கு வயது 36. இருவரும் தந்தை, மகனாவர். இந்தச் சம்பவம் வர்ஜினியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர். இதில் தற்கொலைகளும் அடங்கும். அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்ள வழங்கப்படும் அனுமதி தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர ஆளும் பைடன் அரசு முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.