கடந்த டிசம்பரில் ஏனைய வருடங்களை விட இருமடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக பாரிய ஆசிரியர் பற்றாக்குறையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 39,000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
நேற்று (06) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….
எதிர்வரும் 16ஆம் திகதி 7500 கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தற்போது அரச சேவையில் கடமையாற்றும் 26,000 பயிலுனர் உத்தியோகத்தர்களுக்கும் பரீட்சைகளை நடாத்தி ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 26,000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அந்தப் பரீட்சைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு விதித்துள்ளது. நாம் இந்த விவகாரத்தை சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.
கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மொழிப் பாடங்களுக்குத் தேவையான ஆறாயிரம் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி இரண்டு வாரங்களில் பெறப்படும். தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். அத்துடன், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தால், விரைவில் 26,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எம்மால் முடியும், என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.