சென்னை: ஆவின் பால் பண்ணையில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தி திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளமையில் கல்” என்பதற்கேற்ப இளமைப் பருவத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கில் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. சத்துணவுத் திட்டம்; விலையில்லா புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணி, சீருடை உள்ளிட்ட கல்வி கற்கத் தேவையான பொருட்களை வழங்கும் திட்டம்; அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, தொழிற்சாலைகள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தடுத்து நிறுத்தப்படும்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தமிழக அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
திமுக அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. திமுக அரசின் இந்தச் சட்டவிரோதமான செயல் கடும் கண்டனத்திற்குரியது. தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசே குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால், தனியார் நிறுவனங்களில் நிலவும் நிலைமையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் ஹரிஓம் என்கிற ஒப்பந்த நிறுவனத்தின்மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு இரண்டு மாத கால ஊதியம் அளிக்கப்படவில்லை என்றும், இதனை வலியுறுத்தி ஆவின் பால்பண்ணை நுழைவு வாயிலில் அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனைப் பார்க்கும்போது ‘நெஞ்சு பொறுக்குதிலையே’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
குழந்தைப் பருவம் என்பது ஆடி, ஓடி விளையாடுகின்ற பருவம். கல்வி கற்கின்ற பருவம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனித வாழ்வின் பொற்காலமாக விளங்குவது குழந்தைப் பருவம். இப்படிப்பட்ட குழந்தை பருவத்தில் வேலைக்கு செல்வது என்பது, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஊறுவிளைவிக்கும். இதனை முற்றிலும் மறந்து, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கேற்ப, இந்த முறைதான் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும், அரசுத் துறைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது போலும்! ஆவின் நிறுவனம்தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற நிலை மாறி நாட்டின் எதிர்கால மாணவச் செல்வங்களையே சீரழித்துக் கொண்டிருக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் நலனையும், குழந்தைகளின் எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், ஆவின் நிறுவனத்தில் பணியாற்றிய குழந்தைத் தொழிலாளர்களுக்கான இரண்டு மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவும், குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனத்தின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.