லக்னோ: உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரபல ரவுடிகளில் ஒருவரான சஞ்சீவ் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உள்ளூர் பாஜக தலைவர் பிராம் தத் திவேதி கொலை வழக்கிலும் சஞ்சீவ் ஜீவா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறையில் இருந்த சஞ்சீவ் ஜீவா, வழக்கு விசாரணைக்காக லக்னோ சிவில் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் அவர் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுடப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரைக் கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து லக்னோ மேற்கு துணை காவல் ஆணையர், லக்னோ மத்தி துணை காவல் ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சட்டம் – ஒழுங்கு இணை ஆணையர் உபேந்திர குமார் அகர்வால், “குற்றவாளி சஞ்சீவ் குமார் சுடப்பட்டுள்ளார். மேலும், அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த 2 காவல் துறை அதிகாரிகளும், ஒரு குழந்தையும் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இதுதான் ஜனநாயகமா? ஒருவர் யாரால் கொல்லப்பட்டார் என்பது அல்ல முக்கிய கேள்வி. ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால் பாதுகாப்பு இருக்கிறதா, சட்டம் – ஒழுங்கு இருக்கிறதா என்பதுதான் முக்கிய கேள்வி” என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுர்யா, “இதுபற்றி எனக்குத் தெரியாது. அதேநேரத்தில் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது” என கூறியுள்ளார்.
யார் இந்த சஞ்சீவ் ஜீவா? – சஞ்சீவ் மகேஷ்வரி என்கிற சஞ்சீவ் ஜீவா மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கிய ரவுடியாக இருந்துள்ளார். ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தர் அன்சாரியின் கூட்டாளி இவர். கடந்த 2028-ல் பக்பத் சிறையில் இருந்த முன்னா பஜ்ரங்கி கொலைக்குப் பிறகு இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இருந்தார்.
பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லக்னோ சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சீவ் ஜீவா, வழக்கு விசாரணைக்காக இன்று லக்னோ சிவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.