ஒடிசாவில் மீண்டும் பயங்கரம்.. காவு வாங்கும் ரயில்கள்.. சீரமைப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலி..

புவனேஸ்வர்:
ஒடிசாவில் அண்மையில் நிகழ்ந்த ரயில் விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக மற்றொரு பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. இன்ஜினே இல்லாத சரக்கு ரயில் திடீரென புறப்பட்டு மோதியதில் 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஒடிசாவில் கடந்த வாரம் நேரிட்ட பயங்கர ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் கூட, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பலியானவர்கள் ஒருபுறம் இருக்க, இந்த விபத்தில் தங்கள் கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் என ரத்த உறவுகளை பறிகொடுத்து நூற்றுக்கணக்கானோர் நிர்கதியாக நிற்கின்றனர். இன்னும் பலர் கை, கால்களை இழந்து நிரந்தர ஊனமாகிவிட்டனர். இதனிடையே, இந்த விபத்து சதிவேலையாக இருக்கும் என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாக, மற்றொரு பயங்கர சம்பவம் ஒடிசாவில் நடந்திருக்கிறது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் இன்று மாலை ரயில்வே டிராக்குகளை சீரமைக்கும் பணியில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கர வேகத்தில் சூறைக்காற்றும் அதன் தொடர்ச்சியாக கனமழையும் பெய்துள்ளது.

இதனால் என்ன செய்வதென தெரியாத தொழிலாளர்கள், மழையில் நனைவதை தவிர்ப்பதற்காக பக்கத்து தண்டவாளத்தில் உள்ள சரக்கு ரயிலுக்கு அடியில் ஒதுங்கியுள்ளனர். இன்ஜின் இல்லாததால் தைரியமாக அந்த ரயிலுக்கு கீழ் அவர்கள் சென்றுள்ளனர். அப்போது திடீரென ரயில் நகரத் தொடங்கியுள்ளது. இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக ரயிலின் சக்கரத்தில் அவர்கள் சிக்கி நசுங்கினர்.

இந்த கோர விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்று அதிக வேகத்தில் வீசியதால் ரயில் நகர்ந்து இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.