லாகூர்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம்.
இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ம் தேதி இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதேவேளை, இம்ரான்கான் கைது செய்யப்பட்டப்போது அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் வன்முறை சம்பவங்களும அரங்கேறியது.
அதேவேளை, போரட்டக்காரர்களை வன்முறைக்கு தூண்டியதாக இம்ரான்கான் ஆதரவாளரும் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷா முகமது குரேஷியை போலீசார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குரேஷி ராவல்பெண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யும்படி குரேஷி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு ஷா முகமது குரேஷியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஒரு மாதமாக சிறையில் இருந்த குரேஷி நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று இம்ரான்கானை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.