ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்; தினமும் 2,500 லிட்டர் பால் திருட்டு – அதிர்ச்சிக் கிளப்பும் வேலூர் ஆவின்!

வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான ‘ஆவின்’ தலைமை அலுவலகம், சத்துவாச்சாரி பகுதியில் செயல்பட்டுவருகிறது. இந்தப் பண்ணையிலிருந்து, தினந்தோறும் இருபது ஒப்பந்த வாகனங்கள்மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள 600 முகவர்களுக்கு 93,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், வேலூர் ஆவின் பண்ணையிலிருந்து பால் திருடுபோவதாக தொடர் புகார்கள் குவிந்துவந்தன. இதையடுத்து, உற்பத்திசெய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கும், விற்பனைசெய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், ‘தவறு எங்கே நடக்கிறது, எப்படி நடக்கிறது?’ எனக் கண்காணிக்கத் தொடங்கினர்.

வேலூர் ஆவின்

இந்த நிலையில், பால் பாக்கெட்டுகளை ஏற்றிச்செல்ல நேற்று மதியம் பால் வேன்கள் உள்ளே வந்தன. காவலாளி வாகன எண்களை சரிபார்த்தபோது, ஒரே பதிவெண்ணில் இரண்டு வேன்கள் பண்ணைக்குள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி, காவலாளி அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார். அதிகாரிகள் விரைந்து சென்றுபார்த்தபோது, TN 23 AC 1352 என்ற ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் பல ஆயிரம் லிட்டர் மதிப்பிலான பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயார் நிலையில் இருந்தன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இரண்டு வேன்களையும் பால் பாக்கெட்டுகளுடன் பறிமுதல்செய்தனர்.

இதுபற்றி, வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடமும் முறையிட்டிருக்கிறார்கள். பண்ணைக்குள் பணிபுரியும் சிலரின் உதவியுடன் இந்தப் பால் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, பண்ணைக்குள் பிடித்துவைக்கப்பட்டிருந்த போலி பதிவெண் கொண்ட வேனை, அங்கேயே பணிபுரியும் இளைஞர்கள் சிலர் அடாவடி செய்து, வெளியே எடுத்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர்களும் பால் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இது சம்பந்தமாக ஆவின் நிறுவன அதிகாரிகள், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாரளிக்கவிருக்கிறார்கள்.

பிடிபட்ட ஒரே பதிவெண் கொண்ட வேன்கள்

இது சம்பந்தமாக போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திமிரி வழித்தடத்திலுள்ள பால் முகவர்களுக்காக இயக்கப்படும் வேன் பதிவெண்ணை, இன்னொரு வேனுக்கும் பயன்படுத்தி பண்ணைக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இதற்கு பண்ணைக்குள் பணிபுரியும் சிலர் உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இப்படியே நாளொன்றுக்கு 2,500 லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உற்பத்திசெய்யப்பட்ட பாலின் அளவையும், விற்பனைசெய்யப்பட்ட பாலின் அளவையும் ஒப்பிட்டு சரிபார்த்திருந்தால், ஆரம்பத்திலேயே திருட்டைத் தடுத்திருக்க முடியும். அதோடு, இந்த விவகாரத்தில் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அந்த பிரமுகரின் பேரன் தலைமையிலான கும்பல்தான் பால் திருட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவந்திருப்பதால், ஆவின் அதிகாரிகள் புகார் கொடுத்தப் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.