மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் நேற்று ஔரங்கசீப், திப்பு துல்தான் ஆகியோரின் படங்களை, சிலர் தங்கள் வாட்ஸ்ஆப்பில் புகழ்ந்து ஸ்டேட்டஸ் வைத்திருந்தனர். இந்த ஸ்டேட்டஸ் நகர் முழுவதும் தீயாகப் பரவியது. இதைக் கண்டித்து நேற்று இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டம் இரு பிரிவினரிடையே மோதலாக மாறியது. மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் இந்து அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து இன்று காலையில் சிவாஜி சோக்கில் கூடி போராட்டம் நடத்தினர். அதோடு முஸ்லிம் பழ வியாபாரி ஒருவரை இந்து அமைப்பினர் தாக்கினர்.
இந்து அமைப்பினர் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்ல முயன்றபோது யாரோ கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். அதனால், மீண்டும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் கடைகள், வாகனங்கள் மற்றும் முஸ்லிம்களின் மசூதிகள்மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் வன்முறையாளர்கள்மீது தடியடி நடத்தினர். இதனால் முக்கியமான இடங்களில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ஔரங்கசீப், திப்பு சுல்தான் போன்ற வரலாற்று பிரமுகர்களை திடீரென பிரபலப்படுத்த நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள் பிரச்னையைக் கிளப்ப முயல்கின்றன. எவ்வாறு திடீரென சோஷியல் மீடியாவில் ஔரங்கசீப் பற்றி வெளியிட்டனர் என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும். போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மூன்று சிறுவர்கள் வெளியிட்டதாகத் தெரியவந்திருக்கிறது.
அதனால், அவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
மேலும் கலவரம் தொடர்பாக 30 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.