கருணாநிதி 100 நிகழ்வு | கருணாநிதியின் பிறந்தநாளை ‘மாநில சுயாட்சி நாள்’ ஆக அறிவிப்பீர்: திருமாவளவன்

சென்னை: “கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாள் என்று அறிவிக்கப்படும் என்று விழுப்புரத்தில் முதல்வர் அறிவித்துள்ளார். அது ஒரு மாநிலத்தோடும், ஒரு மொழி அளவோடு நின்றுவிடும். அகில இந்திய பார்வை கொண்டவர் கருணாநிதி. எனவே, அவருடைய பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் என்று அறிவிக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. இதற்காக அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டதால், ஒரு சில நிகழ்வுகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், புதன்கிழமை மாலை நடைபெற்றது. பின்னி மில் வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணிகட்சிகளைச் சேர்ந்த கி.வீரமணி,கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன், திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இதில் திருமாவளவன் பேசியது: “இன்றைய காலச்சூழலில், இன்று எழுந்துள்ள மிக முக்கியமான கருத்தியல் போர், மாநில அரசுகள் இப்போதுதான் குமுறத் தொடங்கியிருக்கின்றன. மத்தியில் அதிகாரத்தை குவிக்கிறார்கள். ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே ஆட்சி, என்கிறார்கள். எங்கே போய் இது முடியப்போகிறது. இந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒரு தலைவரை நினைவுகூர்கிறார்கள் என்றால், அந்த பெருமைக்குரியவர் கருணாநிதி.

இந்தியாவில் எந்த முதல்வரும் எண்ணிப்பார்க்காத ராஜமன்னார் குழுவை அமைத்தவர் கருணாநிதி. மாநில அரசுக்கான உறவை இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான உறவை ஆய்வு செய்வதற்காக ஒரு மாநில முதல்வர் ஓர் ஆணையத்தை அமைக்கிறார். ஒரு குழுவை அமைக்கிறார். அதுதான் ராஜமன்னார் குழு. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி சட்டமன்றத்தில், மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். இது நடைபெற்றது 1969-73 வரையிலான காலத்தில்.

அண்ணா மறைவுக்குப் பின்னர், அவர் முழங்கிய 5 முழக்கங்களில் மிகமுக்கியமான முழக்கம் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. கூட்டட்சி என்பதைப் பற்றி அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், சுயாட்சி குறித்து அரசியலமைப்புச் சட்டம் சொல்லவில்லை. சுயாட்சி என்பது கருணாநிதியின் சிந்தனை. அது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் இறையாண்மை இருப்பதை முதன்முதலில் எடுத்துரைத்தவர் கருணாநிதி.

எனவே முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இரண்டு மூன்று தினங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாள் என்று அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு செய்தீர்கள். அது ஒரு மாநிலத்தோடும், ஒரு மொழி அளவோடு நின்றுவிடும். அகில இந்திய பார்வை கொண்டவர் கருணாநிதி. எனவே, அவருடைய பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் என்று அறிவிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.