சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்குநராக அறிமுகமான காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வாலின் காதலராக ஆதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து இளம் பெண்களின் இமீடியட் கிரஷ் ஆக மாறிய நடிகர் சுதீப் சாரங்கியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பழைய படங்களில் நடித்த நடிகர்களை பல நாட்களுக்கு பிறகு சமூக வலைதளத்தில் பார்க்கும் ரசிகர்கள் உடனடியாக அவர்களை சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கி விடுகின்றனர்.
அப்படி தற்போது சோஷியல் மீடியா டிரெண்டாக மாறியுள்ளார் காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்த நடிகர் சுதீப் சாரங்கி.
ஒரு படத்தில் நடித்தாலும்: ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் ஒரு சில நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் அப்படியே நீங்கா இடம் பிடித்து விடுவார்கள்.
காதல் மன்னன் ஹீரோயின் மானு, ஜேஜே பட நாயகி பிரியங்கா கோதாரி, நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்ட அந்த லைட் மேன் என ஒரு படத்தில் வந்தாலும், ஒரு சீனில் வந்தாலும் ரசிகர்கள் மனங்களை சிலர் கவர்ந்து விடுவார்கள். அப்படி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் காதல் கொண்டேன் படத்தில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்த சுதீப் சாரங்கியும்.
காதல் கொண்டேன் ஆதி: அண்ணன் செல்வராகவன் கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான நடிகர் தனுஷ் அடுத்ததாக செல்வராகன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் சைக்கோ மாணவராக நடித்து மிரட்டி இருப்பார்.
அந்த படத்தில் தனுஷுக்கு அல்வா கொடுத்து விட்டு ஹேண்ட்ஸம் பாயான ஆதியை தான் சோனியா அகர்வால் காதலிப்பார். கிளைமேக்ஸ் காட்சி வரைக்கும் ஆதியை காலி செய்ய போராடும் தனுஷ் கடைசியில் தனது காதலியின் காதலுக்காக தன்னையே மாய்த்துக் கொள்வார்.
போன் பூத்தில் லிப் லாக்: செகண்ட் ஹீரோ என்று சொல்ல முடியாத அளவுக்கு படத்தில் ஹீரோவாகவே சுதீப் நடித்திருப்பார். வில்லனாகத் தான் தனுஷ் நெகட்டிவ் ஷேடில் நடித்திருப்பார்.
“பதினெட்டு வயதில் பார்ப்பவர் எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு”, “காதல் காதல் காதலில் நெஞ்சம்” என பாடல்களிலும் ஆதியாக நடித்த சுதீப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். யுவன் இசையில் சூப்பர் ஹிட் அடித்த தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் பாடலில் போன் பூத்தில் சோனியா அகர்வாலுக்கு லிப் லாக் கிஸ் எல்லாம் அப்போதே அடித்து நடித்து அசத்தி இருப்பார் சுதீப் சாரங்கி.
இப்போ எப்படி இருக்கிறார்: காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு என்னமோ பிடிச்சிருக்கு படத்தில் நடித்த சுதீப்புக்கு தமிழில் சோலோ ஹிட் கிடைக்கவில்லை. அதன் பின்னர், இந்தி மற்றும் பெங்காலி மொழிப் படங்கள் மற்றும் சீரியல்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார்.
சமீபத்தில், விளம்பரம் ஒன்றில் கார் டிரைவராக சுதீப் நடித்த நிலையில், அவரது வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. நடிகர் சுதீப்பின் இன்ஸ்டா ஐடியை கண்டுபிடித்த ஏராளமான தமிழ் ரசிகர்கள் அவரை காதல் கொண்டேன் காலத்துக்கே கொண்டு சென்று விட்டனர்.