அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வடகிழக்கு மாநில உணவு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகாலாந்து மாநிலத்தின் இரு இளைஞர்கள் மீது குஜராத்திகள் கொடூர தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் நீண்டகாலம் இந்திய மைய நீரோட்டத்தில் இணையாமல் தனித்துவம் மிக்கவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்தியர்களை நமது நாட்டவர்கள் என்ற மனோநிலையுடன் வடகிழக்கு மாநிலத்தவர் அணுகாமல் இந்தியர்கள் என்றே அணுகி வருகின்றனர். இந்த சிந்தனைப் போக்கு சமீப காலங்களில் பெருமளவில் மாறிக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாநிலங்களில் சென்று பணிபுரிவது; அங்கேயே குடியிருப்பது என்பவைதான். அதாவது இந்திய நீரோட்டத்தில் வடகிழக்கு மாநில மக்களும் தங்களை ஒப்படைத்து இணைந்து கொண்டுள்ளனர்.
ஆனால் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் வடகிழக்கு மாநில மக்கள் மீது மகாராஷ்டிரா, குஜராத், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்படுவது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 10 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் எந்த வித அச்சுறுத்தல் இல்லாமலும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதற்கு தமிழ்நாட்டு அரசியல் சித்தாந்தமும் அடிப்படையானதாக இருக்கிறது.
இந்நிலையில்தான், குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாணக்கியாபுரியில் வடகிழக்கு மாநில உணவு வகைகளை விற்பனை செய்த உணவகத்தை இந்து மத காவலர்கள் எனும் பெயரில் குண்டர்கள் தாக்கி உள்ளனர். One Stop North-East என்ற அந்த உணவகத்தில் நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநில உணவு வகைகள் கிடைக்கும். இதனால் அப்பகுதியில் இந்த உணவகம் பெயர் பெற்றதாக இருந்தது.
ஆனால் இந்துக்கள் அதிகம் வாழும் மாநிலம் குஜராத்: இங்கு வடகிழக்கு மாநில அசைவ வகை உணவுகளை விற்பனை செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று அந்த உணவகம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த கேஹிர், ஜமீர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவமானது நாகாலாந்து மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.