ஹவுரா (மேற்கு வங்கம்): ஒடிசாவில் விபத்துக்குள்ளான 3 ரயில்களில் ஒன்றான ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், விபத்துக்குப் பிறகு இன்று தனது வழக்கமான பயணத்தை மீண்டும் தொடங்கியது.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து கடந்த 2-ம் தேதி புறப்பட்ட ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து, எதிர் திசையில் வந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸும் இந்த விபத்தில் சிக்கியது. 3 ரயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியை சீரமைக்கும் பணி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. விபத்தால் சேதமடைந்த ரயில்வே தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி வழியாக ஹவுரா – பூரி வந்தே பாரத் ரயில் கடந்த திங்கள்கிழமை இயக்கப்பட்டது. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பழுதுபார்க்கப்பட்டு அது இன்று தனது வழக்கமான பயணத்தை தொடங்கியது.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை, ரயில்வே பணியாளர்களும் பயணிகளும் மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து அனுப்பிவைத்தனர். பெரும் விபத்துக்குள்ளான ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 5 நாட்களில் மீண்டும் தன் பயணத்தை தொடங்கி இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.