`டி.டி.வி சார்… நாம் களத்தில் இறங்கி விளையாடினால்..!' – வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓபிஎஸ்

வைத்திலிங்கம் மகன் சண்முகபிரபுவுக்கும், தவமணி மகள் யாழினிக்கும் தஞ்சாவூர் மகாராஜா மஹாலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கும்பகோணம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பல வருடங்களுக்குப் பிறகு தினகரன், ஓ.பி.எஸ் இருவரும் ஒன்றாக ஒரே மேடையில் இருந்தது பலரது கவனத்தையும் பெற்றது.

வைத்திலிங்கம் இல்லத் திருமணவிழா

இதற்காக ஓ.பி.எஸ், தினகரன், வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக இருப்பதுபோல் மண்டபத்தில் பல இடங்களில் ஃப்ளக்ஸ் வைத்திருந்தனர். சசிகலா போட்டோ எந்த இடத்திலும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.எஸ் வந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் தினகரன் வந்தார். பின்னர் மேடை ஏறியவர்கள், ஒன்றாகச் சேர்ந்து தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தனர்.

அப்போது தள்ளி நின்ற ஓ.பி.எஸ்-ஸை, `பக்கத்தில் வந்து நில்லுங்க’ என்று அழைத்து நிற்க வைத்துக்கொண்டார் தினகரன். பின்னர் ஒன்றாகச் சேர்ந்து மணமக்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். மேடையில் பெரும் கூட்டம் முண்டியடித்ததால் தினகரன் லேசாகக் கடுப்பானார். அதைத் தொடர்ந்து இருவரும் மேடைக்குக் கீழே இறங்கினர். பின்னர் அங்கும் கூட்டம் முண்டியடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

ஓ.பி.எஸ், தினகரன்

அதைச் சரிசெய்த வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி, `ஓ.பி.எஸ், தினகரன் இருவரையும் பேச வைக்க வேண்டும், அதுதான் முக்கியம்’ எனக் கூறி மேடைக்கு அழைத்துவந்தார். பின்னர் மேடை ஏறி அமர்ந்த இருவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. ஓ.பி.எஸ், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தினகரனை, `சார்…’ எனக் குறிப்பிட்டுப் பேசினர்.

பின்னர் பேசிய டி.டி.வி.தினகரன், “மணமக்கள் அனைத்து வளமும் பெற்று வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம்தான் மகிழ்ச்சியான தருணம். இந்தத் திருமணத்தை நடத்திவைத்ததில் மகிழ்ச்சி என்றால், அ.தி.மு.க நிர்வாகிகளுடன் இணைந்து திருமணத்தை நடத்திவைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்றைய தினம் அனைவரும் ஒன்றாய் ஒரே கூரையின்கீழ் இணைந்திருக்கிறோம்.

டி.டி.வி.தினகரன்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் துரோகத்தால், சுயநலத்தால் அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவே அ.ம.மு.க-வைத் தொடங்கினேன். கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்துக்கொண்ட நானும், பன்னீர்செல்வமும் பேசி ஒன்றாகச் செயல்படுவோம் என முடிவெடுத்தோம். காலத்தின் கட்டாயத்தால் இருவரும் பிரிந்து செயல்பட்டாலும், அரசியலைத் தாண்டி எனக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்கும் நல்ல நட்பு தொடர்ந்து வந்தது. அது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

அதனால்தான் பிரச்னைகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்காக… அ.ம.மு.க, அ.தி.மு.க-வுடன் சேர்ந்து ஒன்றாகக் கைகோத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. அதன் நல்ல தொடக்கம் நண்பர் வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழாவில் அமைந்திருக்கிறது. இந்த இணைப்பு வரும் காலத்தில் துரோகிகளுக்குப் பாடம் புகட்டும், தீய சக்தியான தி.மு.க-வை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றி ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்காக சிறப்பாகச் செயல்படுவோம்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

அவரைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இன்றைக்கு சோழமண்டலமான தஞ்சாவூரில் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு கொடுத்த வைத்திலிங்கத்துக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். 7-ம் தேதி எம்.ஜி.ஆருக்குப் பிடித்தமான தேதியாகும். மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும். அ.தி.மு.க-வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அவரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வைக் கட்டுக்கோப்புடனும், எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் வழிநடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்.ஜி.ஆர் வழியில் நிலைநிறுத்தியவர் ஜெயலலிதா.

பல்வேறு சோதனைகள், சதி வலைகளை உடைத்து மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தது என்றால், அது ஜெயலலிதாவால்தான். அ.தி.மு.க-வின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். தஞ்சை தரணியில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தொடக்கம் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

வைத்திலிங்கம் மகன் திருமண விழா

அதனடிப்படையில் நம்முடன் டி.டி.வி சார் இணைந்திருக்கிறார். தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால், நம்மை வெல்ல தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் யாரும் இல்லை என்கிற நிலை ஏற்படும்… ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.