சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.125 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த 2022 மே 7-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ‘‘ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 63 நகராட்சி பகுதிகளில் ரூ.177 கோடியில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இதில் முதல்கட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில்ஒன்றான, சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா சாலையில்உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அங்கிருந்தபடி, மற்ற மையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து முதல்வர் பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் கல்வி, மருத்துவம் இரண்டையும் இரு கண்களாக போற்றி வருகிறோம். ஆனால், மிக பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் இது புலப்படாமல், தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தேசிய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் 3 மாநிலங்களின் வரிசையில் தமிழகம் உள்ளதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 1.51 கோடி பயனாளிகளுக்கு முதல்முறை சேவைகள், 3.04 கோடி பேருக்குதொடர் சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது. இதை அவர் படித்துப் பார்க்க வேண்டும்.
கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனை வரும் 15-ம் தேதி திறக்கப்படுகிறது.
500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், ரூ.66 கோடி மதிப்பில் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் என்பது இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மருத்துவம் நவீனமயமாக வேண்டும். புதிய நோய்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக நமது மருத்துவர்கள் செயல்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகள் நிறைய நடக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டுமின்றி, மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் எப்படி ஏழை எளியோரின் நம்பிக்கையாக இருக்கிறதோ, அதை போலவே நகர்ப்புற நலவாழ்வு மையமும் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைபணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மையம் காலை 8 முதல் பகல் 12 வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையும் செயல்படும்.